3 டாக்டர்கள், 26 செவிலியருக்கு கொரோனா - மூடப்பட்ட மும்பை மருத்துவமனை..!

3 டாக்டர்கள், 26 செவிலியருக்கு கொரோனா - மூடப்பட்ட மும்பை மருத்துவமனை..!
3 டாக்டர்கள், 26 செவிலியருக்கு கொரோனா - மூடப்பட்ட மும்பை மருத்துவமனை..!
 மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மூன்று மருத்துவர்கள் மற்றும் 26 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது.
மும்பையிலுள்ள வோக்ஹார்ட் மருத்துவமனை வளாகம் இன்று முதல் ஒரு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மருத்துவமனையில் பணிபுரியும்  சுகாதார ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா  மருத்துவ பரிசோதனையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
என்.டி.டி.வி  அளித்துள்ள செய்தியின்படி  இந்த மருத்துவமனையில்  பணிசெய்த  26  செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்கள் என மொத்தம் 29 பேருக்கு நடத்தப்பட்ட  மருத்துவ பரிசோதனையில் பாசிடிவ் எனக் கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் என இத்தனை பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உள்ளது உறுதியாகி இருப்பதால் அந்தப் பகுதி மக்களிடையே இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மருத்துவமனை வளாகமே கொரோனா நோய்த் தொற்றின் ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது.
இந்த நோய்த் தொற்றால் மருத்துவமனை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரி டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு தகவல் அளித்துள்ளார். 30 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று ஏற்பட இந்த மருத்துவமனையே காரணமாக அமைந்துள்ளது என ஆய்வின் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நகரத்தில் வேறு எந்தப் பகுதிகளைவிட இதுவே தொற்று உருவாக்கும் மையப்பகுதியாக இருந்துள்ளது. 
மகாராஷ்டிராவில்  கொரோனா பாதிப்பால் 19 பேர் இறந்துள்ளனர்.  நேற்றைய நிலவரப்படி இதுவரை மொத்தம் 748 பேர் இந்த நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதில், 433 பேர் மும்பை பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலும்  மலபார் ஹில்ஸ், பெடார் சாலை, வோர்லி மற்றும் தாதர் ஆகிய  பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாட்டில் 109 இறப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com