அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா
அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மாtwitter pages

’சூப்பர் ஸ்டாருக்கு ஹெல்மெட் தேவையில்லையா’ - அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மாவுக்கு வந்த சோதனை!

மும்பையில், பாலிவுட் நட்சத்திரங்கள் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Published on

ஒவ்வோர் உயிரும் விலை மதிப்பில்லாதது. இதைக் கருத்தில்கொண்டே வாகனத்தில் செல்பவர்களுக்கு அரசு பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ளது. குறிப்பாக, டூவீலரை இயக்குபவர், கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என்கிற விதி உள்ளது. தற்போது அதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்கிற விதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஹெல்மெட் இல்லாமல் டூவீலரில் பயணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர், நடிகர் அமிதாப் பச்சன். இவர், பல வெற்றிப் படங்களைத் தந்துள்ளார். இந்த நிலையில் படம் ஒன்றில் நடிப்பதற்காக, ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் செல்ல தன்னுடைய சொகுசு காரில் மும்பை நகரில் பயணித்துள்ளார். அப்போது மும்பையில் கடுமையான டிராஃபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உரிய நேரத்துக்குள் செல்வதற்காக, தன்னுடைய சொகுசு காரை விட்டு இறங்கி, யாரென்றே அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் பைக்கில் லிஃப்ட் கேட்டுச் சென்றுள்ளார்.

தாம் பைக்கில் சென்ற அனுபவத்தை, அமிதாப் பச்சன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டதுடன், தன்னை அழைத்துச் சென்ற நபருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். ஆனால், அவர்கள் இருவருமே ஹெல்மெட் அணியவில்லை. இதுதான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படம் வைரலானதுடன், அவருக்கு எதிராகச் சில நெட்டிசன்கள் கமெண்ட்களையும் அள்ளித் தெளித்தனர்.

’சூப்பர் ஸ்டாருக்கு ஹெல்மெட் தேவையில்லையா’, ’போலீஸுக்கு இவர்களுக்கு அபராதம் விதிக்காதா’ என கமெண்ட்கள் பறந்தன. மேலும், இந்த விவகாரத்தை, மும்பை போலீஸ் வரை கொண்டு சென்றனர், நெட்டிசன்கள். அதற்குப் பதிலளித்த மும்பை போலீசார், “இதை டிராஃபிக் போலீசாருக்கு தெரிவித்து விட்டோம். சம்பந்தப்பட்ட நடிகருக்கும் அந்த பைக்கை ஓட்டிச் சென்றவருக்கும் அதற்கான அபராதம் விதிக்கப்படும்” எனப் பதில் அளித்துள்ளனர்.

அதுபோல், நடிகையும் கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மாவும் மும்பையில் டூவீலரில் பயணித்தபோது ஹெல்மெட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும், பைக்கில் ஒருவருடன் பின்னால் ஹெல்மெட் இல்லாமல் செல்லும் படத்தையும் நெட்டிசன்கள் பதிவிட்டு, அதை மும்பை போலீசாரின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

ஆக, இந்த இரண்டு பாலிவுட் நட்சத்திரங்களின் ஹெல்மெட் விவகாரமும் பிரச்னையைப் பெரிதாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை விதிக்கப்படும் என மும்பை டிராஃபிக் போலீசார் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது என்பது குறிப்பிட்த்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com