சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும்: பள்ளி மாணவர்களுக்கு முதல்வர்கள் வேண்டுகோள்
இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் தொடர்ந்து வரும் நிலையில், சீனப் பொருட்களை புறக்கணிக்குமாறு மும்பை பள்ளி மாணவர்களை பள்ளிகளின் முதல்வர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக மும்பை பள்ளி முதல்வர்கள் சங்கம், மாணவர்களுக்கு ஆப்ஸ் மூலம் செய்திகளை அனுப்பி வருகிறது.
இது, சீன எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவரும் இந்திய ராணுவத்தினருக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு சிறிய செயலாக இருக்கும் என்று முதல்வர்கள் சங்கம் கூறியிருக்கிறது. சீனா உடனான எல்லைப் பிரச்னை குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், நாட்டுப்பற்றை தூண்டவும் இந்த செய்தியை அனுப்பி வருவதாகவும் மும்பை பள்ளி முதல்வர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் பேனாக்கள், அழிப்பான்கள், ஜியாமென்ட்ரி பாக்ஸ்கள் போன்ற பொருட்களில் பெரும்பாலானவை சீனாவின் தயாரிப்புகள்தான் என்பதை மாணவர்கள் நன்கு அறிவர் என்றும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. இந்தப் பொருட்களைப் புறக்கணிப்பதன் மூலம் சீனப் பொருளாதாரத்திற்கு சிறிதளவேனும் பாதிப்பை ஏற்படுத்த முடியுமெனில், அது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும் என்று மும்பை பள்ளி மாணவர்களுக்கு முதல்வர்கள் கூறியுள்ளனர். மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்து 500 பள்ளிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.