மூச்சுக்காற்று மோதிக் கொள்ளும் அளவிற்கு மக்கள் நெருக்கம்: கொரோனாவை சமாளிக்குமா தாராவி?

மூச்சுக்காற்று மோதிக் கொள்ளும் அளவிற்கு மக்கள் நெருக்கம்: கொரோனாவை சமாளிக்குமா தாராவி?
மூச்சுக்காற்று மோதிக் கொள்ளும் அளவிற்கு மக்கள் நெருக்கம்: கொரோனாவை சமாளிக்குமா தாராவி?

55 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மகாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள தாராவி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாறியிருக்கிறது.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய குடிசைப்பகுதி மும்பையில் உள்ள தாராவி. இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் உள்ள பல்வேறு இடங்கள் பளபளவென மின்னினாலும் தாராவி மட்டும் சேதமடைந்த கருப்பு வெள்ளை புகைப்படம் போலவே காணப்படுகிறது. தாராவிக்கும் தமிழர்களுக்குமான உறவு நூறாண்டுகளுக்கும் மேலானது. தாராவியில் 6 முதல் 10 லட்சம் பேர் வரை வசிப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோனார் தமிழர்கள். ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 2 லட்சத்து 70 ஆயிரம் பேர் வசிக்கும் அளவிற்கு மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடம் தாராவி.

சென்னை மற்றும் நியூயார்க் நகரங்களில் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 27 ஆயிரம் பேர் வசிக்கிறார்கள். மக்கள் நெருக்கத்தில் தாராவியை விட 10 மடங்கு குறைவாக இருக்கும் நியூயார்க் நகரமே கொரோனா பாதிப்பில் சிக்கி திணறிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில் தீப்பெட்டியை அடுக்கி வைத்தார் போல் நெருக்கமாக இருக்கும் சிறு சிறு வீடுகளில் வசிக்கும் தாராவி மக்களை கொரோனா விட்டுவிடுமா என பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். அங்கு இதுவரை 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் உயிரிழந்துவிட்டனர். தாராவியின் மக்கள்தொகையே அது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக மாற காரணமாகிவிட்டது.

கொரோனா மட்டுமல்ல இதற்கு முன்னர் பிளேக், காலரா, டைபாய்டு போன்ற நோய்களும் தாராவியை ஆட்டிப்படைத்திருக்கின்றன. தாராவியில் அருகருகே நெருக்கமாக இருக்கும் இரு வீட்டில் வசிப்பவர்களுக்கு இடையே எந்த சண்டையும் இல்லாவிட்டாலும் அவர்கள் விடும் மூச்சுக்காற்று மோதிக்கொள்ளும் என்பார்கள். அத்தகைய சூழலில் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க பெரிதும் உதவும் தனிமனித இடைவெளியை எப்படி பின்பற்றுவது எனத்தெரியாமல் தாராவி மக்கள் தவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com