மும்பைக்கு இன்று ரெட் அலர்ட்... வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மும்பையில் நேற்று காலை முதல் இடைவிடாமல் கன மழை கொட்டுகிறது. விமானம், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து முற்றிலும் நீரில் மூழ்கிய நிலையில். இன்றும் மும்பையில் அதி கன மழை பெய்யும் என்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
மும்பையில் இடைவிடாமல் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை மும்பையையே நீரில் மிதக்கச் செய்திருக்கிறது. பேருந்து, ரயில், விமானம் என அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடங்கியதால், பொதுமக்கள் பெரும் தத்தளிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். குடியிருப்பு பகுதிகள், சாலைகள் என மும்பையில் எங்கு திரும்பினாலும் மழை வெள்ளம்தான். 4ஆவது நாளாக பெய்த கனமழையால் மும்பையே மிதக்கிறது.
தாழ்வான பகுதிகள், சாலைகள் குளம்போல் காட்சியளிக்கின்றன. பல இடங்களில் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் தத்தளிப்பதை காண முடிந்தது. "வெள்ளம் வந்தால் என்ன?, கவலையில்லை" என்று சொல்வதைப்போல, தேங்கிய மழைநீரில் சிறுவர்கள் ஆனந்த குளியலிட்டு உற்சாகமடைந்தனர்.
தானே நகரில் சுரங்கப் பாதையில் தேங்கிய வெள்ளத்தில் கார் மூழ்கிய நிலையில், உள்ளூர்வாசிகள் நீரில் குதித்து நீந்திச் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்டனர். கனமழையால் தண்டவாளமே தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, சியோன் - குர்லா இடையே அதிக பாதிப்பு உள்ளது. இது, புறநகர் ரயில் சேவையை முற்றிலுமாக முடக்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பல்வேறு விரைவு ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மற்றொருபுறம், மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மும்பையில் தரையிறங்க வேண்டிய பல விமானங்கள் சூரத், அகமதாபாத், ஹைதராபாத் நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. விமானங்கள் புறப்பாடும் தாமதமானது. மும்பைக்கு புதன்கிழமையன் இன்று வரை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் தொடரும் நிலையில், அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 3 மணி அதாவது 11 மணி நேரத்தில் மட்டும் 200 மில்லி மீட்டர் அளவுக்கு பேய் மழை பெய்திருக்கிறது.
ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் சராசரி மழை அளவான 37 சதவீத மழை, வெறும் 54 மணி நேரத்தில் மும்பையில் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மும்பை மைசூர் காலனி, பக்தி பார்க் ரயில் நிலையங்களுக்கு இடையே மோனோ ரயில் நடுவழியில் நின்றது. கனமழையால் ஏற்பட்ட மின்தடை காரணமாக மோனோ ரயில் நடுவழியில் நின்ற நிலையில், ரயிலுக்குள் இருந்த பயணிகள் கிரேன் மூலம் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.