இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா மும்பையில் கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.
மும்பை விமான நிலையத்திற்கு அருகே உள்ள கேளிக்கை விடுதியில் மும்பை மாநகர போலீசார் சோதனையிட்டபோது ரெய்னாவை கைது செய்து உள்ளனர்.
ரெய்னா உட்பட சுமார் 34 பேரை இந்த சோதனையின்போது போலீசார் கைது செய்துள்ளனர். பாடகர் குறு ரந்த்வானா மற்றும் பாலிவுட் பிரபலம் ஸூசென் கானும் இந்த சோதனையில் கைதாகி உள்ளனர்.
அரசு அனுமதித்த நேரம் கடந்து கேளிக்கை விடுதி செயல்பட்டதை அடுத்து போலீசார் அங்கு சோதனையிட்டபோது அங்கிருந்தவர்களை கைது செய்துள்ளனர். உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது. அதை தொடர்ந்தே இந்த சோதனை நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த கேளிக்கை விடுதியில் கைதானவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 188 (அரசு ஊழியர்களின் சட்டபூர்வமான அதிகாரத்தினை அவமதிப்பது), 34 (ஒரு குற்ற செயலை கூட்டு நோக்கோடு புரிவது) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிகாலை 3 மணி அளவில் கைதான ரெய்னா பின்னர் ஜாமீனில் வெளியேறியதாகவும் சொல்லப்படுகிறது.

