மும்பை நபர் எடுத்த விபரீத முடிவு | மனைவி, மாமியார் காரணம்.. இணையத்தில் வைரல் கடிதம்!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்த அதுல் சுபாஷ் என்பவர், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். பொறியாளரான இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, அவர் கைப்பட எழுதிய 24 பக்கங்கள் கொண்ட கடிதம் சிக்கியது.
அதில், தனது தற்கொலைக்கான காரணம் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், தனது நிம்மதியை அவர்கள் கெடுத்துவிட்டதாகவும் அதில் கூறியிருந்தார். அவருக்கு ஆதரவாக நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத் உள்ளிட்ட சிலர் கருத்து தெரிவித்தனர். வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறை சட்டங்களை மறு ஆய்வு செய்ய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் சட்ட வல்லுநா்கள் அடங்கிய குழுவை அமைக்கக் கோரி வழக்குரைஞா் விஷால் திவாரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தாா்.
என்றாலும், நாடு முழுவதும் மனைவியின் துன்புறுத்தல் மற்றும் சித்ரவதை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, மும்பையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் ஒருவர் தனது மனைவியின் சித்ரவதை தாங்காமல் ஆக்ராவில் தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில், தற்போது அடுத்த துயரம் மும்பையில் மீண்டும் அரங்கேறி உள்ளது.
நிஷாந்த் திரிபாதி (41) என்பவர் மும்பையில் உள்ள சகாரா என்ற ஹோட்டலில் கடந்த வாரம் அறை எடுத்து தங்கினார். அவர் தனது அறைக்குச் சென்றவுடன், ’தன்னை தொந்தரவு செய்யவேண்டாம்’ என அறைக்கு வெளியில் அறிவிப்பு செய்திருந்தார். அவர் மூன்று நாள்கள் அறையில் தங்கி இருந்தார். ஆனால் அவர் அறைக்குள் சென்று அதிக நேரம் ஆனபிறகும் அவரது கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் தங்களிடம் இருந்த சாவி மூலம் அவரது அறைக் கதவை திறந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்திருந்தார். இதுகுறித்து ஹோட்டல் ஊழியர்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மறுபுறம், அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை அவரது நிறுவன இணையதளத்தில் பதிவு வைத்திருந்தார். அதில், அவரது மனைவி அபூர்வா பாரிக் மற்றும் அவரது மாமியார் பிரார்த்தனா மிஸ்ரா ஆகியோர்தான் காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில், ”நீ இந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நான் உயிரோடு இருக்கமாட்டேன். கடைசி நேரத்தில் நடந்த அனைத்திற்காகவும் உன்னை நான் வெறுத்திருக்கலாம். ஆனால், நான் அதை விரும்பவில்லை. இந்தத் தருணத்திற்காக அன்பைத் தேர்வு செய்கிறேன். இப்போது, நான் உன்னைக் காதலிக்கிறேன். நான் உறுதியளித்தபடி, எனது அன்பு மங்கப்போவதில்லை. நான் சந்தித்த அனைத்துப் போராட்டங்கள் மற்றும் எனது மரணத்திற்கு நீயும், உனது தாயாரும்தான் காரணம் என்பதை எனது தாயார் அறிவார். எனவே, இப்போது அவரை நீ அணுக வேண்டாம் என்று நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே, எனது தாயார் போதுமான அளவு உடைந்துவிட்டார். அவர் நிம்மதியாக துக்கப்படட்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நிஷாந்த் திரிபாதியின் தாயார் மருமகள் மற்றும் சம்பந்தி மீது புகார் கொடுத்துள்ளார். தவிர, தனது மகனின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து நீலம் சதுர்வேதி, முகநூலில் பதிவு ஒன்றைப் ப்திவிட்டுள்ளார். அதில், ”என் வாழ்க்கை இப்போது முடிந்துவிட்டது. என் மகன் நிஷாந்த் என்னை விட்டுப் பிரிந்துவிட்டான். நான் இப்போது உயிருள்ள பிணமாகிவிட்டேன். அவன், என் இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் இன்று மார்ச் 2ஆம் தேதி, மும்பையில் உள்ள ECO-MOKSHAவில் என் மகனை தகனம் செய்தேன். என் மகள் பிராச்சி தன் மூத்த சகோதரனின் இறுதிச் சடங்குகளைச் செய்தார். இவ்வளவு பெரிய இடியைத் தாங்கும் அளவுக்கு எனக்கும் என் மகள் பிராச்சிக்கும் தைரியம் கொடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.