பல உயிர்களை காப்பாற்றிய மும்பையின் ஹீரோ விபத்தில் பலி; சுங்க ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

பல உயிர்களை காப்பாற்றிய மும்பையின் ஹீரோ விபத்தில் பலி; சுங்க ஊழியருக்கு நேர்ந்த சோகம்!
பல உயிர்களை காப்பாற்றிய மும்பையின் ஹீரோ விபத்தில் பலி; சுங்க ஊழியருக்கு நேர்ந்த சோகம்!

மும்பையின் பாந்த்ரா - ஒர்லி சீ லிங்க் மேம்பால பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கார் வெடித்து விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற வேண்டுமென கடல்வழி மேம்பால சுங்கச்சாவடி ஊழியர்களும், ஆம்புலன்ஸும் விரைந்தது.

இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிக் கொண்டிருந்த போது அவ்வழியே தாறுமாறாக வந்த கார் ஒன்று ஆம்புலன்ஸ் மற்றும் அங்கிருந்த கார்கள் மீது மோதியதால் மீண்டும் பெரும் விபத்து நேர்ந்தது.

இதில், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவர், சுங்கச்சாவடி ஊழியர்கள் நால்வர் உட்பட ஐவரும் உயிரிழக்கவே 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் உயிரிழந்த சுங்கச்சாவடி ஊழியர்களில் ஒருவரான சேத்தன் கடம் என்பவர் அதே மேம்பாலத்தில் மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டு உயிரை விட துணியும் பலரையும் காப்பாற்றியவரார்.

பலரது உயிர்களை காப்பாற்றியிருக்கும் சேத்தன் கடமே தற்போது பரிதாபமாக விபத்தால் உயிரிழந்ததது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 36 வயதான சேத்தன் கடம் பாந்த்ரா-ஒர்லி கடல் மேம்பால சுங்கச்சாவடியில் 2009ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார்.

கடந்த 2012ம் ஆண்டு 23 வயது பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த போது தக்க சமயத்தில் அவரை காப்பாற்றியதற்காக சேத்தன் கடமிற்கு மாநில உள்துறை அமைச்சரிடம் இருந்தும், போலீசாரிடம் இருந்தும் விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.

அதேபோல கடந்த 2016ம் ஆண்டு பாந்த்ரா - ஒர்லி சீ லிங்க் பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்யவிருந்த நபரையும் சேத்தன் காப்பாற்றியிருக்கிறார். இப்படியாக பல்வேறு நபர்களின் உயிரை சேத்தன் காப்பாற்றியிருக்கிறார். இதுபோக, விபத்தில் காயமடைந்தவர்களை சேதமடைந்த கார்களில் இருந்து இறக்கி, அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதிலும் அவர் தேர்ந்தவராக இருந்தார்.

இலவச ஆம்புலன்ஸ் சேவைகளை வழங்கும் யுக் பிரவர்தக் பிரதிஸ்தான் என்ற லாப நோக்கற்ற அமைப்பை நிறுவியிருக்கிறார் சேத்தன் கடம். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

எந்த ஒரு பிரதிபலனும் இல்லாமல் பலரது உயிரை காப்பாற்றி வந்து மும்பையின் ஹீரோவாகவே இருந்த சேத்தன் கடம் தான் உயிரிழக்கும் முன்பு கூட பிறருக்கு உதவி செய்தது மும்பைவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் அவரது பிரிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com