மாஸ்க் இல்லை... அபராதம் செலுத்த பணமும் இல்லை... அப்போ தண்டனை?
மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல ஆசைப்படுகீற்களா? அப்போ சாலைகளைப் பெருக்கி சுத்தப்படுத்த ரெடியா இருங்க என்கின்றனர் மும்பை போலீஸார். ஆம், மாஸ்க் அணியாமல் வெளியே சென்றால் ரூ.200 அபராதம் செலுத்தவேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அபராதம் செலுத்த பணமும் இல்லை... மாஸ்க்கும் அணியவில்லை என்றால் ஒரு மணிநேரம் சாலைகளைப் பெருக்கி சுத்தப்படுத்த வேண்டும் என மும்பை மாநகராட்சி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக கே-வெஸ்ட் பகுதிகள் என்று சொல்லக்கூடிய மேற்கு அந்தேரி, ஜூஹு மற்றும் வர்சோவா பகுதிகளில் ஏற்கெனவே மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த நிறையப்பேரை ஒருமணிநேரம் சாலையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியிருக்கின்றனர்.
கடந்த 7 நாட்களாக மாஸ்க் அணியாமல் வெளியே வந்துவிட்டு, போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையாக இந்த பொதுசேவையை செய்ய வைத்திருப்பதாக உதவி மாநகராட்சி ஆணையர் விஸ்வாஸ் மோத் பிடிஐ-யிடம் கூறியுள்ளார். மேலும் கே-வெஸ்ட் பகுதியில் மட்டும் இதுவரை 35 பேருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாலையில் எச்சில் துப்புபவர்களுக்கு அரசு திடக்கழிவு மேலாண்மை ஆணையத்தால் வழங்கப்படும் தண்டனைதான், சாலையை பெருக்கி சுத்தப்படுத்துதல். தற்போது மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு இந்த தண்டனையைக் கொடுப்பது விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்கள் தவறை உணரவைப்பதற்காகத்தான் என்கின்றனர் அரசு அதிகாரிகள். ஆனால் நிறையப்பேர் ஆர்வமுடன் இந்த சமூக சேவை பணியில் ஈடுபடுவதாகத் தெரிவித்துள்ளனர்.