அப்பா ஜூனியர்; மகள் சீனியர் - கலக்கல் சட்டக்கல்லூரி ஸ்டூடெண்ட்ஸ்
மும்பையில் தந்தையும் மகளும் ஒரே கல்லூரியில் பட்டப்படிப்பை படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி பருவம் என்பது அனைத்து மாணவர்களின் வாழ்வில் மிகவும் மறக்க முடியாத பருவமாக இருக்கும். அந்தப் பருவத்தை மாணவர்கள் மகிழ்ச்சியாக தங்களின் நண்பர்களுடன் செலவிட விரும்புவார்கள். இதற்கு மாறாக மும்பையில் ஒரு இளம் பெண் தன்னுடைய கல்லூரில் தனது தந்தையுடன் படித்து வரும் செய்தி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்தத் தந்தை மகள் தொடர்பாக ‘ஹூமென்ஸ் ஆஃப் மும்பை’(Humans of Mumbai) என்ற பக்கத்தில் ஒரு பதிவு போடப்பட்டுள்ளது. அந்தப் பதிவில் அப்பெண், “என் தந்தைக்கு சட்டப் படிப்பு மீது எப்போதும் ஆர்வம் இருந்தது. எனினும் அவரின் குடும்பச் சூழலால் அவர் படிப்பை தொடராமல் வேலை பார்க்க சென்றுவிட்டார். அவரின் கடின உழைப்பால் எங்களை நன்றாக படிக்க வைக்கவேண்டும் என்று நினைத்தார். அதன்படி என்னுடைய அக்கா மருத்துவராகவுள்ளார். நானும் எனது அண்ணனும் சட்டப்படிப்பு பயின்று வருகிறோம். நான் சட்டக் கல்லூரியில் சேர்ந்தவுடன் எனது தந்தை தினமும் சட்டக் கல்லூரியின் பாடங்கள் மற்றும் வகுப்புகள் குறித்து விசாரிப்பார்.
இதனையடுத்து அவருக்கு இன்னும் சட்டப் படிப்பின் மேல் உள்ள ஆர்வம் தீரவில்லை எனத் தெரிந்து கொண்டேன். மேலும் அவருக்கு தற்போது ஓய்வு நேரம் அதிகம் இருப்பதால் அவரைக் கல்லூரியில் சேர்க்க நாங்கள் அனைவரும் திட்டமிட்டோம். அதன்படி அவரை என்னுடைய கல்லூரியில் சட்டப்படிப்பு சேர்த்தோம். அவர் என்னுடைய கல்லூரியில் எனக்கு ஜூனியராக தற்போது உள்ளார்.
நானும் எனது தந்தையும் தற்போது கல்லூரியில் சிறப்பாக பயின்று வருகிறோம். நாங்கள் இருவரும் கல்லூரியில் பாடங்கள் குறித்தும் விரிவுரையாளர்கள் குறித்தும் கலந்து உரையாடுவோம். அத்துடன் அவர் என்னுடைய நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக உரையாடி வருகிறார். நாங்கள் இருவரும் கூடிய விரைவில் பட்டப்படிப்பை முடித்து விட்டு வழக்கறிஞராக பணியாற்றும் ஆர்வம் அதிகரித்துள்ளது. நானும் எனது தந்தையும் தற்போது மகிழ்ச்சியாக எங்களின் கனவை நோக்கி பயணித்து வருகிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.