‘கணவரை இழந்த பின் மகனுக்காக பேருந்து நடத்துநரான தாய்’ - இன்று இந்திய அணியில் மகன்

‘கணவரை இழந்த பின் மகனுக்காக பேருந்து நடத்துநரான தாய்’ - இன்று இந்திய அணியில் மகன்
‘கணவரை இழந்த பின் மகனுக்காக பேருந்து நடத்துநரான தாய்’ - இன்று இந்திய அணியில் மகன்

மும்பையை சேர்ந்த பேருந்து நடத்துநரும், பெண்ணுமான வைதேகியின் மகன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் வைதேகி அங்கோலெகார். இவர் தனது கணவர் மற்றும் மகனுடன் குடும்பத் தலைவியாக வாழ்ந்து வந்தார். 2010ஆம் ஆண்டு பெரும் துயரம் ஒன்று இவருக்கு நேர்ந்தது. அரசுப் பேருந்து நடத்துநராக பணிபுரிந்து வந்த இவரது கணவர் வினோத் திடீரென உயிரிழந்தார். அப்போது வைதேகியின் மகன் அதர்வாவிற்கு வயது 9. இந்த குடும்பத்தின் ஒரே தூணாக இருந்த கணவர் வினோத் இல்லாமல் போனது வைதேகிக்கு பெரும் சோகத்தையும், பொருளாதார சிக்கலையும் ஏற்படுத்தியது. இதனால் மகனின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என பெரும் கவலையில் சிக்கினார் வைதேகி. இருந்தாலும் மனம் தளராத அவர், தனது வீட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்தார். அதில் வந்த சிறிய வருமானத்தில் மகனுக்காக எதையும் செய்ய முடியவில்லை என வருந்தினார்.

அப்போது தனது கணவரின் நடத்துநர் வேலை வைதேகிக்கு வழங்கப்பட்டது. மகனின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, நடத்துநர் வேலை உடனே ஏற்றார் வைதேகி. அதில் கிடைத்த வருமானத்தின் மூலம் தனது மகனின் எதிர்காலத்தை மீண்டும் மீட்டெடுத்தார். சிறுவன் அதர்வா கிரிக்கெட் விளையாட்டில் கில்லாடியாக இருந்ததால், அவரது தந்தை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்தார். தந்தையின் இறப்பிற்கு பின்னர் முடங்கிப்போயிருந்த அவரின் கிரிக்கெட் வாழ்விற்கு உயிர்கொடுத்தார் வைதேகி. தந்தையை எப்படி மகனை கிரிக்கெட்டில் ஊக்கப்படுத்தினரோ, அதைவிட அதிகமாகவே வைதேகி மகனை கிரிக்கெட்டில் ஈடுபட வைத்தார். அதன் பலனாக இன்று 18 வயதில் இந்திய அணியின் இளம் வீரர்கள் அணியில் அதர்வா இடம்பெற்றுள்ளார். 

இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதும், அதர்வாவிற்கும் அவரது தாய் வைதேகிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்த வண்ணம் வந்துகொண்டிருக்கின்றன. தனது மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்ட வைதேகி, “எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு இது பெருமையான தருணமாகும். எனது கணவரின் வருமானத்தில் மட்டுமே வந்த நாங்கள், அவரது இழப்பிற்கு பின்னர் தடுமாறிப்போனோம். அந்த நேரத்தில் எனக்கு நடத்துநர் வேலை வழங்கிய பேருந்து நிர்வாகத்திற்கு கடமைப் பட்டிருக்கிறேன். அதன்மூலமாக நான் எனது மகனின் கனவை நினைவாக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

அதர்வா கூறும் போது, “நான் எனது தந்தையை பிரிந்து மிகவும் வாடுகிறேன். நான் குழந்தையாக இருக்கும்போது, எனது தலையணைக்கு அருகில் கிரிக்கெட் பேட் ஒன்றை எனது தந்தை வைப்பார். நான் வளர்ந்த பின்னர், எப்போதெல்லாம் நன்றாக கிரிக்கெட் விளையாடுகிறேனோ, அப்போதெல்லாம் எனக்கு புதிய கிரிக்கெட் பேட், கையுறைகள், ஹெல்மெட் என விளையாட்டு பொருட்களை பரிசாக கொடுப்பார். அது எல்லாத்தையும் நான் இப்போது நினைத்து வருந்துகிறேன். நான் இந்திய அணிக்காக கடுமையாக விளையாடுவேன்” என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான அதர்வா, சிறுவயதிலேயே திறம்பட பந்துவீசும் நபராக இருந்துள்ளார். 2010ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் ‘கிரிக்கெட் கடவுள்’ எனப்படும் சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை அதர்வா கைப்பற்றியுள்ளார். அதற்காக அதர்வாவை பாராட்டிய சச்சின் டெண்டுல்கர், தனது கையொப்பம் இட்ட கையுறைகளை அவருக்கு வழங்கியுள்ளார். இப்படிபட்ட அதர்வா, இலங்கையில் நடைபெறவுள்ள இளம் வீரர்களுக்கான ஆசிய கோப்பையிலும் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com