மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு
மும்பையில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
நான்குமாடி கட்டிடம் என்பதாலும் மிக குறுகலான பகுதி என்பதாலும் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இயந்திரங்களையும் மீட்பு வாகனங்களையும் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
100 ஆண்டுகள் பழைய கட்டடம் என்பதால் தொடர் மழைக்கு தாங்காமல் இடிந்து விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அருகில் உள்ள மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கே சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த விபத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 50 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கட்டட விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருபவர்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திப்பதாகவும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் எனவும் மோடி தெரிவித்துள்ளார்.