விமான கடத்தல் பீதி ஏற்படுத்திய தொழிலதிபருக்கு ஆயுள் தண்டனை: ரூ. 5 கோடி அபராதம்!
விமானத்தில் கடத்தல் பீதியை ஏற்படுத்திய தொழிலதிபருக்கு ஆயுள் தண்டனையும் 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்து தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் இருந்து மும்பைக்கு 9W339 என்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தின் கழிவறையில் கடிதம் ஒன்று கிடந்தது. அதில், ’விமானத்தின் உள்ளே 12 கடத்தல்காரர்கள் இருக்கிறார்கள். விமானத்தை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு உடனடியாகத் திருப்ப வேண்டும். வேறு எங்கும் விமானத்தைத் தரையிறக்கினால், பயணிகள் ஒவ்வொருவராக உயிரிழக்கும் சத்தத்தை கேட்பீர்கள். இதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சரக்குகள் வைக்கப்படும் பகுதி யில் சக்தி வாய்ந்த குண்டு இருக்கிறது. அல்லா இஸ் கிரேட்’ என்று உருது மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
இந்த தகவல் விமானிக்குத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானம் அகமதாபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது. அங்கு போலீசார் மற்றும் விமான நிலைய பாதுகாப்புப்படையினர் உஷார் படுத்தப்பட்டிருந்தனர். இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், அந்த விமானத்தில் பயணித்த மும்பையை சேர்ந்த பிர்ஜூ சல்லா (Birju Salla) என்ற தொழிலதிபரை கைது செய்தனர். அவர்தான் அந்த கடிதத்தை எழுதியிருந்தார். ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண் ஒருவரை தனது நிறுவனத்தில் பணியில் சேர சல்லா அழைத்த நிலையில், அவர் மறுத்துவிட்டதால் விமானக் கடத்தல் எச்சரிக்கை விடுத்துள்ளது தெரிய வந்தது.
இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜெட் ஏர்வேஸ், சிவில் விமான போக்குவரத்து துறையிடம் பரிந்துரை
செய்திருந்தது. இந்த வழக்கு, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விமான கடத்தல் சட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, கடத்தல் மிரட்டல் போன்றவற்றுக்கும் தண்ட னை அதிகரிக்கப்பட்டிருந்தது. அந்த புதிய சட்டத்தின்படி சல்லாவுக்கு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கடத்தல் பீதி ஏற்படுத்திய பிர்ஜூ சல்லாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். விமானத்தில் பயணித்த 116 பயணிகளுக்கும் இந்த அபராத தொகையில் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும் என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, ‘நோ ஃப்ளை லிஸ்ட்’டிலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. அதாவது தேசிய விமான பயணத்தடை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.