மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் புல்லட் ரயில் திட்டத்தின் சிறம்பு அம்சங்கள்
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டத்திற்கு பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் இன்று அடிக்கல் நாட்டுகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே இந்த அதிவேக புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமான இது 1,10,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டத்திற்கான 81 சதவிகித தொகையை அதாவது 88 ஆயிரம் கோடி ரூபாயை 0.1 சதவிகித வட்டியில் ஜப்பான் கடனாக வழங்குகிறது. அகமதாபாத் - மும்பை இடையே 508 கிலோ மீட்டர் தூரத்திற்கு புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளது. மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் புல்லட் ரயில், மொத்த தூரமான 508 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரம் 7 நிமிடத்தில் கடக்கும்.
மொத்தமாக 12 ரயில் நிலையங்களில் நின்று செல்லும் புல்லட் ரயில், 92 சதவிகித தூரம் மேம்பாலத்திலும், 6 சதவிகித தூரம் சுரங்கப்பாதையிலும் 2 சதவித தூரம் தரைவழியிலும் செல்லும். 21 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதையில் செல்லும் புல்லட் ரயில் அதில் 7 கிலோ மீட்டர் தூரம் வரை கடலுக்கு அடியில் பயணிக்கும். 2022 ஆம் ஆண்டு இந்தியா 75-ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாட்டின் முதல் புல்லட் ரயில் பயணத்தை தொடங்கும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.