'நான் தற்கொலை செஞ்சுக்கப் போறேன்’ - மெசேஜ் அனுப்பிவிட்டு உதவி மேனேஜர் எடுத்த விபரீத முடிவு

'நான் தற்கொலை செஞ்சுக்கப் போறேன்’ - மெசேஜ் அனுப்பிவிட்டு உதவி மேனேஜர் எடுத்த விபரீத முடிவு
'நான் தற்கொலை செஞ்சுக்கப் போறேன்’ - மெசேஜ் அனுப்பிவிட்டு உதவி மேனேஜர் எடுத்த விபரீத முடிவு

தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக தனது சக ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு பன்னாட்டு நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குருகிராமிலுள்ள ரவி நகர் காலணியைச் சேர்ந்தவர் அமித் குமார்(40). இவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் மனமுடைந்த நிலையில் அமித் குமார் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டிற்கு சென்றிருக்கிறார். அன்றிரவு தனது சக ஊழியர்களுக்கு ’’நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன்’’ என மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து அமித்தின் மனைவி பூஜா மோஹர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், ‘’எனக்கும் அமித் குமாருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவர் கடந்த ஒன்றரை மாதங்களாக தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். காலை 7.20 மணியளவில் எனக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில், குமாரின் நிறுவனத்திலிருந்து அழைப்பதாகக் கூறினார்கள். போனில் பேசிய நபர், நேற்றிரவு அலுவகலத்தில் குமாருக்கும் சக ஊழியர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு இரவு குமார் சக ஊழியர்கள் பலருக்கும் தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள போவதாக மெசேஜ் அனுப்பியிருக்கிறார். அவர் இப்போது நலமாக உள்ளாரா என பார்க்கும்படி என்னிடம் கேட்டார்.

உடனே நான் மேல்தளத்திற்குச் சென்று பார்த்தேன். அங்கு எனது கணவர் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. நாங்கள் அமித்தை மேதாந்தா மருத்துவமனைக்கு கொண்டுசென்றோம். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாகக் கூறிவிட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். அதனடிப்படையில், செக்டார் 9A காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் அமித் குமார் தற்கொலை செய்துகொண்ட இடத்திலிருந்து எந்த தற்கொலை குறிப்பும் கிடைக்கவில்லை என்றும், அமித்தின் செல்போனை கைப்பற்றி பரிசோதனை செய்துவருவதாகவும் காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com