வைரலான ‘முக்காலா முக்காபுலா’ டான்ஸ் வீடியோ: குவிந்த 4.5 லட்சம் பார்வையாளர்கள்..!

வைரலான ‘முக்காலா முக்காபுலா’ டான்ஸ் வீடியோ: குவிந்த 4.5 லட்சம் பார்வையாளர்கள்..!
வைரலான ‘முக்காலா முக்காபுலா’ டான்ஸ் வீடியோ: குவிந்த 4.5 லட்சம் பார்வையாளர்கள்..!

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘முக்காலா முக்காபுலா’ இந்திப் பாடலுக்கு இளைஞர்கள் நடனமாடி இருக்கும் வீடியோ ஒன்று 4 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 1994 ஆண்டு வெளியான திரைப்படம் ‘காதலன்’. இந்தப் படத்தில் பிரபுதேவா மற்றும் நடிகை நக்மா நடித்திருந்தனர். மேலும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பிரபுதேவாவுடன் இணைந்து பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். அந்தப் பாடல் அன்றைய காலத்தில் அதிகமாகப் பேசப்பட்டது. அதனையடுத்து இப்படத்தில் இடம்பெற்ற ‘முக்காலா முக்காபுலா’ பாடல் ஒன்றும் அன்றைய இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காகவும் மற்றும் பிரபுதேவாவின் நடனத்திற்காகவும் திரை ரசிகர் அதிகம் பேரைத் திரையரங்கத்திற்கு அழைத்து வந்தது. வசூல் ரீதியாகவும் இந்தப் படம் வெற்றியை ஈட்டியது.

இதன் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை அடுத்து ‘Hum Se Hai Muqabala’ என மொழி மாற்றி இந்தியிலும் இந்தப் பாடல் வெளியானது. நடன உலகில் இன்று வரை பல இந்திய இளைஞர்களின் மைக்கேல் ஜாக்சனாக வலம் வரும் பிரபுதேவாவுக்கு இந்தியில் தனித்த அடையாளத்தை ஏற்படுத்தியதே இந்தப் படம்தான். இந்தப் பழையக் கதை எல்லாம் இப்போது எதற்கு என்கிறீர்களா? காரணம் இருக்கிறது.

ட்விட்டரில் சின்னபார் அண்டர்ஸ்கோர் டஸ்ட் (cinnabar_dust) என்ற கணக்கில் இந்தப் பாடலுக்கு இன்றைய நடனக் கலாச்சாரத்திற்கு ஏற்ப சில இளைஞர்கள் புதியதாக நடனம் அமைத்து ஆடி இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த இளைஞர்கள் பிரபுதேவாவை மிஞ்சும் அளவுக்கு ஆடியுள்ள இந்த நடனம் பார்ப்பவர்களைக் கண்களை இமைக்கவிடாமல் செய்கிறது. யார் எந்தப் பக்கத்தில் ஆடுகிறார்கள் எனக் கவனிக்க முடியாத அளவுக்கு மிகவும் வேகமாக அவர்கள் ஆடும் நடனம் சமூக வலைத்தளத்தில் வைரலாக மாறி இருக்கிறது. காலை நேரம்  கடற்கரை  ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மேல் கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com