முகலாய சாம்ராஜ்யத்தின் தொடக்கப்புள்ளி... 4 ஆண்டுகளே இந்தியாவை ஆண்ட பேரரசர் பாபரின் வரலாறு இதுதான்!

பாபரின் சுயசரிதை, ‘துசுக்-இ-பாபரி’ என்றும் ‘பாபர்நாமா’ என்றும் பாபரின் சுய நினைவுக்குறிப்புகள் கிடைக்கின்றன
பேரரசர் பாபர்
பேரரசர் பாபர்மாதிரிப்படம்

உலகளவிலும் இந்தியாவிலும் பாபர் மீண்டுமொருமுறை இன்று மிகமுக்கியமான பேசுபொருளாக ஆகியிருக்கிறார். காரணம், அயோத்தி ராமர் கோயிலின் பிரான பிரதிஷ்டை விழா. இதுவொரு பக்கம் இருக்கட்டும். இந்த நேரத்தில் பாபரை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்வோம்.

இந்திய வரலாற்றின் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படும் முகலாய பேரரசின் முதல் அரசர், பாபர்தான். இவர்தான் மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தின் மிகமுக்கிய தொடக்கப்புள்ளி. ஆனாலும் 1526-30 வரை மட்டுமே (4 ஆண்டுகள்) ஆட்சி செய்தார் பாபர். ஏன்? அதன்பிறகு அவருக்கு என்ன ஆனது? எப்படி இந்தியாவுக்குள் இந்தளவுக்கு பரந்து விரிந்தார் பாபர்? எப்படி அவர் இந்தியாவுக்கு வந்தார்? இவர் எதிர்கொண்ட போர்கள் எத்தனை? இவரின் வாரிசு யார்? இவரின் மரணம் எப்படி, ஏன் நிகழ்ந்தது? பார்ப்போம்....

பேரரசர் பாபர்
பேரரசர் பாபர்

பாபரின் பிறப்பிடம் மத்திய ஆசியா பகுதியை சேர்ந்த யுஸ்பெகிஸ்தான். அங்குள்ள பெர்கானா பகுதியில் உமர் ஷேக் மிர்சா என்ற சிறு நில மன்னரின் மகன்தான் ஜாஹிருதீன் முகமது என்ற இயற்பெயர் கொண்ட பாபர். 1483-ல் பிறந்த பாபர், தந்தைவழியில் இந்தியா மீது படையெடுத்த தைமூர் வம்சாவளிவயையும், தாய்வழியில் மங்கோலிய வம்சாவளியையும் சேர்ந்தவர்.

NGMPC057
பாபருக்கு 11 வயது இருக்கும்போதே அவரின் அப்பா இறந்துவிடவே, அப்போதே அரியணை ஏறி, போர்க்களம் கண்டாராம் பாபர். பாபரின் மிகப்பெரிய கனவே, ‘ஒரு மாபெரும் பேரரசை உருவாக்க வேண்டும்’ என்பதுதான்.

அரசராக பொறுப்பேற்றபின்னர், மத்திய ஆசியாவை தன் வசப்படுத்தும் முனைப்பில் இறங்கினார் பாபர். ஆனால் அப்பகுதியில் சஃபாவிட், உஸ்பெக் போன்ற மாபெரும் சாம்ராஜ்யங்கள் ஏற்கெனவே இருந்ததால், தன் முயற்சியில் தோல்வியடைந்த பாபர், தெற்கு ஆசியாவை நோக்கி வந்தார்.

பேரரசர் பாபர்
பேரரசர் பாபர்

1519 தொடங்கி 1523, 24 வரை பயணமும் போர்க்களமுமாக இருந்த பாபர், இறுதியில் காபூல் (இன்றைய ஆப்கானிஸ்தான்), லாபூர் போன்ற பகுதிகளை நோக்கி வருகிறார். அப்போது இந்தியாவை ஆண்டுவந்தது டெல்லி சுல்தான்களின் மன்னன் இப்ராஹிம் லோடி. இவருடைய எதிரியும் உறவினருமான தவுலத்தான் லோடியிடமிருந்து (இப்ராஹிம் லோடி ஆண்ட பஞ்சாப்பில் பொறுப்பிலிருந்தவராக இருந்தபோதே), ‘இந்தியாவின்மீது படையெடுத்து வாருங்கள்’ என பாபருக்கு அழைப்பு வருகிறது. இதேபோல ராணா சங்கா என்ற ராஜபுத்திர கூட்டமைப்பின் தலைவரிடம் இருந்தும் பாபருக்கு அழைப்பு வந்துள்ளது.

மேலும் சில அழைப்புகளும் பாபருக்கு கிடைத்துள்ளன. அழைப்பு இந்தளவுக்கு விடுக்கப்பட காரணம், டெல்லி சுல்தான்களின் ஆட்சிமீது மக்களுக்கும், அவருடன் இருந்தவர்களுக்குமேகூட மிகப்பெரிய அதிருப்தி இருந்தது என்பதுதான் என சொல்லப்படுகிறது. இதையறிந்த பாபரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்தியா போன்றதொரு மிகப்பெரிய நிலப்பரப்பில் தன் ஆட்சியை அமைக்க தயாரானார்.

பேரரசர் பாபர்
பேரரசர் பாபர்

அதன்படி பட்டுப்பாதை (எ) சில்க் ரூட் வழியாக 1524, 21-ல் லாகூர் வழியாக இந்தியா வந்தார் பாபர். ஆனால் இப்ராஹிம் லோடியை எதிர்க்கும்முன்பே தவுலத்கான் லோடி மனம் மாறி பாபர் மீதே போர் தொடுக்கிறார். இதையடுத்து தவுலத்கான் லோடியை வென்று ஒரு வெற்றியுடனேயே இந்தியாவுக்குள் நுழைந்தார் பாபர். தொடர்ந்து இந்தியாவிற்குள் நுழைந்த பாபர், டெல்லி சுல்தான்கள் மீது ஏப்ரல் 21, 1526-ல் போர் தொடர்ந்தார். அதுதான் முதலாம் பானிபட் போர்.

1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், யானைகள், குதிரைகள் கொண்ட படையை கொண்ட இப்ராஹிம் லோடியை, வெறும் 12,000 வீரர்களை கொண்ட தன் படை மூலம் வெற்றிகண்டார் பாபர். அதற்கு காரணம், பாபரிடம் இருந்த பீரங்கி படை.

கிட்டத்தட்ட ஒரேநாளில் இந்த போர் முடிந்ததாக வரலாறு சொல்கிறது. இப்படியே பாபர் மூலம் முதல்முதலாக முகலாயப் பேரரசு இந்தியாவுக்குள் வந்துள்ளது. முதன்முதலில் இந்தியாவில் பீரங்கிகளை கொண்டுவந்ததும் பாபர்தான்.

இதற்கடுத்தும் பாபருக்கு அடுத்தடுத்து போர்கள் காத்திருந்தன. அந்தவகையில் 1527-ல் கானுவா போர் (ராணா சங்காவுக்கு எதிராக), 1528-ல் சந்தேரி போர் (மேதினி ராய்க்கு எதிராக), 1529-ல் காக்ரா போர் (முகமது லோடி மற்றும் நசுரத் ஷா ஆகியோருக்கு எதிராக) என செய்தார் பாபர். இதில் அவரை இந்தியாவுக்கு அழைத்த ராணா சங்காவுக்கு எதிராக கூட போராடினார் பாபர். அனைத்திலும் வெற்றிபெற்றார் பாபர்...!

அடுத்தடுத்த இந்த போர்களின் வெற்றி சந்தேரியையும், பீகாரையும், வங்காளத்தையுமே இவர்வசம் கொண்டுவந்தது. இந்தியாவில் 4 ஆண்டுகளே இருந்தபோதிலும்கூட, இவரது அரசு காபூலில் (தற்போதைய ஆப்கானிஸ்தான்) இருந்து வங்காளம் வரை பரவியிருந்தது. இதுதான் பின்னாளில் முகலாயப் பேரரசின் கட்டமைப்புக்கு அடித்தளமாகிப்போனது.

பேரரசர் பாபர்
பேரரசர் பாபர்

இதற்குப்பிறகு, 1530-ல் 48 வயதில் பாபர் மரணமடைந்துவிட்டார். தன் மகன் ஹூமாயுனுக்காகத்தான் பாபர் தன்னுயிர் நீத்தார் என்று சொல்லப்படுகிறது. ஹூமாயுன், ஒருமுறை நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும், அவரை மீட்க இறைவனுக்கு மிகப்பெரிய ஒரு விஷயத்தை தானமாக கொடுக்குமாறு சிலர் பாபரிடம் அறிவுறுத்தினராம். அதை ஏற்ற பாபர், தன்னிடம் இருந்த உயிரை இறைவனுக்கு அர்ப்பணித்து, மகன் ஹூமாயுனின் உயிரைக்காத்தார் என சொல்லப்படுகிறது. இந்த ஹூமாயுன்தான், பாபருக்கு அடுத்த முகலாயர்களின் ஆட்சியை கொண்டுசென்றது.

பாபரின் சுயசரிதை, ‘துசுக்-இ-பாபரி’ என்றும் ‘பாபர்நாமா’ என்றும் பாபரின் நினைவுக்குறிப்புகள் கிடைக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com