இந்தியாவின் பணக்கார அமைச்சருக்கு ரூ.1015 கோடி சொத்து!
கர்நாடகாவில் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எம்.டி.பி.நாகராஜ், இந்தியாவின் பணக்கார அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.1,015 கோடி.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த குமாரசாமி, முதலமைச்சராக இருக்கிறார். இவர் தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விஸ்தரிக்கப்பட்டது. இதில் காங்கிரசைச் சேர்ந்த 8 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இவர்களில் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டை சட்டப்பேரவை எம்.எல்.ஏ. எம்.டி.பி.நாகராஜ் என்ற நாகராஜூவும் பதவியேற்றார். முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவின் ஆதரவாளரான இவர் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். 66 வயது ஆகும் இவரது சொத்து மதிப்பு ரூ.1,015 கோடி. இதில் ரூ.437 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.578 கோடி அசையா சொத்தாகவும் உள்ளது. இதையடுத்து இந்தியாவின் பணக்கார அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
2016-17-ம் ஆண்டில் நாகராஜ், ரூ.104 கோடிக்கு வருமான வரி செலுத்தியுள்ளார். இந்த ஆண்டில், அவர் மனைவி உள்பட குடும் பத்தினர் சார்பில் ரூ.157 கோடி வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது.