”எல்லாமே அதானிக்கு மட்டும்தானா.. அப்போ விவசாயி?”.. பிரதமரை மீண்டும் சாடிய மேகாலயா ஆளுநர்!

”எல்லாமே அதானிக்கு மட்டும்தானா.. அப்போ விவசாயி?”.. பிரதமரை மீண்டும் சாடிய மேகாலயா ஆளுநர்!
”எல்லாமே அதானிக்கு மட்டும்தானா.. அப்போ விவசாயி?”.. பிரதமரை மீண்டும் சாடிய மேகாலயா ஆளுநர்!

பிரதமர் மோடியின் நண்பர் அதானியின் நலனை கருத்தில் கொண்டுதான் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அமல்படுத்தப்படவில்லை என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார். விவசாயிகளை பயமுறுத்த அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை அதிகாரிகளை உங்களால் அனுப்ப முடியுமா என கடுமையான கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

மேகாலயா மாநிலத்தில் நூஹ்வில் உள்ள கிரா கிராமத்தில் உள்ள பசுக்கள் காப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக், “குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) அமல்படுத்தப்படாவிட்டால், எம்எஸ்பிக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்கப்படாவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும். இந்த முறை அது கடுமையான போராட்டமாக இருக்கும். இந்த நாட்டின் விவசாயியை உங்களால் தோற்கடிக்க முடியாது. உங்களால் அவர்களை பயமுறுத்த முடியாது... அமலாக்கத்துறை அல்லது வருமான வரி அதிகாரிகளை உங்களால் அனுப்ப முடியாது என்பதால், விவசாயியை எப்படி பயமுறுத்துவீர்கள்?

பிரதமருக்கு அதானி என்ற நண்பர் இருப்பதால், ஐந்து ஆண்டுகளில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக அவர் மாறியுள்ளதால், MSP செயல்படுத்தப்படவில்லை. ஒரு சம்பவத்தை இங்கு பகிர்கிறேன். கவுகாத்தி விமான நிலையத்தில் பூங்கொத்து வைத்திருக்கும் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டதற்கு, ‘அதானி சார்பில் நாங்கள் வந்துள்ளோம்’ என்று பதிலளித்தார். அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். இந்த விமான நிலையம் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

அதானிக்கு விமான நிலையங்கள், துறைமுகங்கள், முக்கிய திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட இது ஒரு நாட்டை விற்பது போன்றது. (அவுர் ஏக் தாரா சே தேஷ் கோ பெச்னே கி தையாரி ஹை). ஆனால் அதை நாம் நடக்க விடக்கூடாது. அதானி பானிபட்டில் ஒரு பெரிய கிடங்கைக் கட்டி, குறைந்த விலையில் வாங்கிய கோதுமையை சேமித்து வைத்துள்ளார். பணவீக்கம் இருக்கும்போது, அவர் அந்த கோதுமையை விற்பார். அதனால் இந்த பிரதமரின் நண்பர்கள் லாபம் சம்பாதிப்பார்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாது, இதற்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்” என்று மிகவும் காட்டமாக பேசினார்.

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக சத்ய பால் மாலிக் மத்திய அரசை, பிரதமர் மோடியை விமர்சிப்பது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி, ஹரியானாவில் உள்ள தாத்ரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தன்னைச் சந்தித்தபோது திமிர்பிடித்த முறையில் பிரதமர் பேசியதாக குற்றம் சாட்டியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com