கூடி பேச்சு; தாடையில் மாஸ்க்.. நாடாளுமன்றத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத எம்பிக்கள்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரையின்போது உறுப்பினர்கள் பலர் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருந்த வரிசை, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் அவைத்தலைவர்கள் ஆகியோர் அமர்ந்திருந்த வரிசைகளில் இருந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்திருந்தனர். மூன்றாவது வரிசையிலிருந்து அமர்ந்திருந்த எம்பிக்கள் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை.
மத்திய மண்டப கூடத்தில் ஐந்து பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் 7 பேர் குழுமி பேசிக் கொண்டிருந்தனர். எம்பிக்களில் பலர் முகக்கவசங்களை தாடையில் இறக்கிவிட்டுவிட்டு சாதாரணமாக பேசிக் கொண்டிருந்ததை காண முடிந்தது. கொரோனா மூன்றாவது அலை பரவலை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மத்திய மண்டப கூடத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.