ஒரே நேரத்தில் பல ஊர்களுக்கு ரயில் டிக்கெட் போடும் எம்.பிக்கள் - வீணாகிறதா அரசு பணம்?
மாநிலங்களவை உறுப்பினர்கள் ரயில்களில் சென்று வந்ததன் மூலம் ரூ.8 கோடியை ரயில்வே துறைக்கு நாடாளுமன்றம் செலுத்தி இருக்கிறது. இந்தத் தொகை 2019 இல் மாநிலங்களவை உறுப்பினர்கள் ரயிலில் சென்று வந்ததற்கான செலவு எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் ரயிலில் பயணம் செய்வதற்கான சலுகைகளை மாநிலங்களவை உறுப்பினர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்றும் முறைகேடும் நடைபெறுவதாக ரயில்வே துறை குற்றஞ்சாட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இம்முறை அதிகப்படியான கட்டணத்தை ரயில்வே துறைக்குச் செலுத்தப்பட்டிருக்கிறது.
மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு ரயில் பயணம் முழுக்க முழுக்க இலவசம். எத்தனை முறை வேண்டுமானாலும் அவர்கள் ரயிலில் சென்று வரலாம். உதாரணத்திற்குச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வெளியிடங்களுக்குச் செல்ல, ரயில் பயணப்படியாக, ஆண்டுக்கு இரண்டு தவணையாக, 20 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படுகின்றன. சட்டப்பேரவை கூட்டத்தொடர் காலத்தில், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் செல்லும் குடும்பத்தினருக்கான, ரயில் கட்டணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஏ.சி., இரண்டாம் வகுப்பு ரயிலில் பயணம் செய்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் தனியாகவும் வழங்கப்படுகிறது.
மேலும் எம்.பி.,க்களின் ரயில் பயணக் கட்டணத்தை நாடாளுமன்றமும், எம்.எல்.ஏ.,க்களின் பயண கட்டணத்தைச் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவையும் செலுத்திவருகின்றன. இவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளால், ரயில்வே துறைக்கு இழப்பு ஏற்படாது. மக்கள் வரிப்பணத்தில்தான் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களின் ரயில் பயணத்தை மேற்கொண்டுவருகிறார்கள். இதேபோலத்தான் 2019 ஆம் ஆண்டுக்கான மாநிலங்களை உறுப்பினர்கள் ரயிலில் பயணம் செய்வதாதற்கான ரூ.8 கோடி கட்டணத்தை நாடாளுமன்றம் ரயில்வே துறைக்குச் செலுத்தி இருக்கிறது.
இது குறித்து "இந்தியா டுடே" வெளியிட்டுள்ள செய்தியில் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்யா நாயுடு கடுமையான அதிருப்தியைத் தெரிவித்திருப்பதாகக் கூறியுள்ளது. மேலும் மாநிலங்களவை பொதுச் செயலர் தேஷ் தீபக் வர்மா கூறுகையில் "ஒரு சில உறுப்பினர்கள் ஒரே இடத்திலிருந்து ஒரு நாளில் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்தது போலக் கணக்குக் காட்டியிருக்கிறார்கள். ரயில்வே துறையின் கூற்றுப்படி மாநிலங்களவை உறுப்பினர்களின் சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து வெங்கய்யா நாயுடு அவர்களிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறோம்" என்றார் அவர்.