ம.பி. |குரோர்பதியில் ரூ.50 லட்சம் வென்ற வட்டாட்சியர்.. வெள்ள நிவாரண நிதியில் ரூ.2.57 கோடி கையாடல்!
குரோர்பதி நிகழ்ச்சி ஒன்றில் ரூ.50 லட்சம் வென்ற பெண் வட்டாட்சியர் ஒருவர், வெள்ள நிவாரண நிதியில் 2.57 கோடி ரூபாய் கையாடல் செய்தது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டிருப்பது பேசுபொருளாகி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அமிதா சிங் தோமர். வட்டாட்சியரான இவர், 2011-ஆம் ஆண்டு 'கௌன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி மூலம் 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வென்று உலக அளவில் பேசுபொருளானார். இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு ஷியோபூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண நிதி விநியோகிக்கப்பட்டபோது, அமிதா சிங் தோமர் பரோடாவின் வட்டாட்சியராக இருந்தார். அவர், 100-க்கும் மேற்பட்ட இடைத்தரகர்களுடன் சேர்ந்து, 127 போலி வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றி, ஏறத்தாழ 2.57 கோடி ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது. நிவாரண நிதி விநியோகத்தின் போது, மோசடியான பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்காக, குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும் அறிமுகமானவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொய்யாகக் காட்டப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில், அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, அவர் ஜாமீன் கேட்டு மனு உச்ச நீதிமன்றத்தை அணுகியிருந்தார். அவரது மனு, தள்ளுப்படி செய்யப்பட்ட நிலையில், குவாலியரில் உள்ள அவரது இல்லத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதற்கு ஒருநாள் முன்னதாக, அவர் விஜய்பூர் வட்டாட்சியர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அவர்மீது விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில், அமிதா சிங் தோமர் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துகளைக் கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார். மேலும், அடிக்கடி நிகழும் இடமாற்றங்கள் குறித்தும், 2023-இல் தனக்கு வட்டாட்சியர் பதவி ஒதுக்கப்படாதது குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்தி அவர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

