மொபைல் ரீ-சார்ஜ் | "பணம் கொடுத்த டேட்டா ஏன் பறிக்கப்பட வேண்டும்?" எம்.பி ராகவ் சதா கேள்வி!
இந்தியாவில் கொரானா காலக்கட்டத்திற்குப் பிறகு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட்போன்கள் அனைவரின் கைகளுக்கும் சென்றடைந்துள்ளன. இணையவசதி அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக மாறியிருக்கிறது. இந்த சூழலில்தான், ஏர்டெல், ஜியோ போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 1 GB, 1.5 GB, 2 GB என்ற வகையில் ரீஜார்ஜ் திட்டங்களுக்கு ஏற்பட்ட தினசரி டேட்டாக்களை வழங்கிவருகின்றன. இந்த ரீ-ஜார்ஜ் திட்டங்கள் பெரும்பாலும் 28 நாட்களே இருக்கும் நிலையில், தினசரி வழங்கப்படும் டேட்டா அன்றைய நாளில் பயன்படுத்தாவிடில் அன்றே தீர்ந்துபோகும் சூழல் இருக்கிறது. இதுகுறித்துப் பல விமர்சனங்கள் இருந்துவரும் சூழலில்தான் மொபைல் ரீ-சார்ஜ் திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி எம்.பி ராகவ் சதா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், ''இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 1.5GB, 2GB என தினசரி வரம்புடன் கூடிய திட்டங்களை வழங்குகின்றன. ஒரு பயனர் தனக்கு ஒதுக்கப்பட்ட 2GB-இல் 1.5GB மட்டுமே பயன்படுத்தினால், மீதமுள்ள 0.5GB டேட்டா நள்ளிரவில் காணாமல் போய்விடுகிறது. இதற்கு ரீபண்ட் கிடையாது; அடுத்த நாளுக்குக் கொண்டு செல்லப்படுவதும் இல்லை. 'பயன்படுத்து அல்லது இழந்துவிடு' என்ற இந்த விசித்திரமான கொள்கை நுகர்வோரை வஞ்சிக்கிறது.
எனவே, அனைத்துth தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த நாளுக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும். ஒருநாளின் இறுதியில் மிஞ்சும் டேட்டா அடுத்த நாள் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். ஒரு பயனர் தொடர்ந்து தனக்கு ஒதுக்கப்பட்ட டேட்டாவை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்றால், அந்த மிச்சமாகும் டேட்டாவின் மதிப்பைக் கணக்கிட்டு, அடுத்த மாத ரீசார்ஜில் கட்டணக் குறைப்பு அல்லது தள்ளுபடி வழங்கப்பட வேண்டும்.
பணத்தை ஒருவருக்கு அனுப்புவதுபோல, தன்னிடம் மிஞ்சும் டேட்டாவை நண்பர்களுக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ மாற்றும் வசதி வழங்கப்பட வேண்டும். நாம் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கி வரும் வேளையில், பணம் செலுத்திய ஒரு சேவை, திடீரென மறைந்துபோவதை ஏற்க முடியாது. நீங்கள் அதற்குப் பணம் செலுத்தியிருந்தால், அது உங்களுக்கே சொந்தமானது; அது அடுத்த நாளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, அமெரிக்கா , ஆஸ்திரேலியா, நெதர்லாந்து உட்பட உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இதேபோன்ற கொள்கைகள் நடைமுறையில் உள்ளன என்றும் அவர் பேசியிருக்கிறார்.

