மணிப்பூரில் மெய்தி, குக்கி சமூகத்தினருக்கு இடையே வெடித்த கலவரம் கடந்த 3 மாதங்களாக நீடித்து வருகிறது. இப்போதுவரை அங்கு அமைதி திரும்பிய பாடில்லை. இந்த வன்முறையை தடுக்க தவறிவிட்டதாக மத்திய, மாநில பாஜக அரசுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. அத்துடன் இந்த பிரச்னையை முன்வைத்து நாடாளுமன்றத்தையும் தொடர்ந்து முடக்கி வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் மணிப்பூருக்கு சென்று, அங்கு கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்துப் பேசினர். குறிப்பாக அக்குழு மணிப்பூர் வன்முறையின் போது ஆண்கள் கும்பலால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு பெண்களின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசியது.
அப்போது ஒரு பெண்ணின் தாயார் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ் மற்றும் திமுக எம்பி கனிமொழி ஆகியோரிடம் பேசும்போது, அந்த சம்பவத்தின்போது கொல்லப்பட்ட தனது கணவர் மற்றும் மகனின் உடல்களைப் பார்க்க உதவுமாறு கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார். மெய்தி, குக்கி சமூகத்தினர் இனி ஒன்றாக வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்றும் அந்தப் பெண் எம்.பி.க்களிடம் கூறினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ், “அந்த பெண்ணின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். மேலும் அவரது கணவர் மற்றும் மகன் மணிப்பூர் காவல்துறை முன்னிலையில் கும்பலால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இன்று வரை ஒரு காவல்துறை அதிகாரி கூட சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இரு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கும்பல் இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் ஒரு குறிப்பிட்ட கோரிக்கையை வைத்துள்ளனர், அதை நான் மணிப்பூர் ஆளுநரிடம் தெரியப்படுத்துவேன்.
போலீஸ் முன்னிலையில், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், அவர்களே தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட இளம்பெண் எங்களிடம் கூறினார். அந்தப் பெண் இப்போது போலீஸை கண்டு அஞ்சுகிறார்.
காங்கிரஸ் எம்பி சுஷ்மிதா தேவ்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கையில்லை எனும்போது அச்சூழலை அரசியலமைப்பு நெருக்கடியாகத் தான் பார்க்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை ராணுவத்தில் பணியாற்றி நாட்டை பாதுகாத்தவர். ஆனால் அவரால் தனது குடும்பத்தை பாதுகாக்க முடியவில்லை என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.
மேலும் அவர், “தன் மகள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தாய் சொல்லி கேட்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. இத்துடன் அந்த தாய் தனது கணவரையும் மகனையும் ஒரே நாளில் இழந்திருக்கிறார். இப்போதும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை” என்று கூறினார்.