மதிப்பெண் குறைந்த மகனை தட்டிக் கொடுத்த அம்மா - ஃபேஸ்புக் வைரல்
மகனின் 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு குறித்து தாய் ஒருவர் இணையத்தில் பதிவிட்டது, பலராலும் கவனிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.
சமீபத்தில் தான் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. 90 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற குழந்தைகளை கொண்ட பெற்றோர்கள் கூட நினைத்த கல்லூரி கிடைக்கவில்லையே, நினைத்த படிப்பு படிக்க வைக்க முடியவில்லையே என மனம் பதறுவது உண்டு. அந்த அளவிற்கு குழந்தைகளின் மதிப்பெண்கள் மீது பெற்றோர்கள் அக்கறை காட்டுகின்றனர்.
ஆனால் 10-ஆம் வகுப்பில் மகன் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட அதனைப் பாராட்டி தாய் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அப்படி என்னதான் அந்தத் தாய் பதிவிட்டார் என்பதை தெரிந்துகொள்ளுவது முக்கியமல்லவா?
வந்தனா சுஃபியா என்ற அந்தப் பெண்மணியின் ஃபேஸ்புக் பதிவில், “ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்களை என் மகன் பெற்றுள்ளார். உண்மையிலேயே அவ்வளவு பெருமையாக உள்ளது என் மகனே.,,! என் மகன் 90 சதவீத மதிப்பெண்கள் எடுக்கவில்லைதான். ஆனால் இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஏனென்றால் சில பாடங்களை படிப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்கள் ஏராளம். அதனை நான் நேரில் பார்த்திருக்கிறேன். முதலில் சில பாடங்களை முடியாது என்றே என் மகன் நினைத்துவிட்டார். ஆனால் தேர்வுக்கு கடைசி ஒன்றரை மாதத்திற்கு முன்பாக விடாமல் முயற்சி செய்து இப்போது இந்த மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்த உலகம் மிகப்பெரியது. அதில் நீங்கள் விரும்பிய வழியில் பயணித்து விரும்பியதை செய்யுங்கள். அதில் நற்குணம் கொண்டவராகவும், விரும்பியதை ஆர்வத்துடன் செய்பவராகவும், உயிரோட்டம் உடையவராகவும் வாழுங்கள். நகைச்சுவை கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் மறக்காதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார். மகனுக்காக தாய் பதிவிட்ட இந்தப் பதிவை பலரும் பாராட்டி பின்னூட்டங்களை பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் இந்தப் பதிவும் வைரலாகி வருகிறது.