தாய், சகோதரியை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை முயற்சி?
பெங்களூரில் தாய் மற்றும் சகோதரிக்கு ஓவர்டோஸ் ஊசி கொடுத்து கொலை செய்து விட்டு மகன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூர் ராஜேஷ்வரி நகரை சேர்ந்தவர் மருத்துவர் கோவிந்த் பிரகாஷ். இவர் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவராக பணியாற்றி வந்தார். 48 வயதான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரது தாய் மூகாம்பிகை நீண்ட நாட்களாக ஒற்றை தலைவலியால் சிரமப்பட்டு வந்தார். மேலும் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.
மேலும் கோவிந்த் பிரகாஷின் சகோதரி ஷியாமலா விதவையாக அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கும் ஒற்றை தலைவலி இருந்து வந்துள்ளது. இந்நிலையில், தாய் மற்றும் சகோதரிக்கு ஓவர்டோஸ் ஊசி கொடுத்து கொலை செய்து விட்டு கோவிந்த் தானும் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து கோவிந்தின் தந்தை வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது, மூகாம்பிகை, ஷியாமலா, கோவிந்த் ஆகியோர் மயக்க நிலையில் இருந்துள்ளனர். இதைப்பார்த்த தந்தை அருகில் இருந்த உறவினர்களின் உதவியோடு மூவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதில் மூகாம்பிகையும் ஷியாமலாவும் உயிரிழந்தனர். கோவிந்த் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் கூறுகையில், தாய் மற்றும் சகோதரிக்கு ஓவர்டோஸ் ஊசி கொடுத்து கொலை செய்து விட்டு கோவிந்த் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் எனவும் அவருக்கு சுயநினைவு வந்தவுடன் உண்மை தெரியவரும் எனவும் தெரிவித்தனர்.