தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு வாரி வழங்கிய 692 கோடி
பங்குச் சந்தையில் முதல் 50 இடத்திலுள்ள தொழில் நிறுவனங்கள் 2018-19ஆம் ஆண்டுகளில் 692.8 கோடி ரூபாயை நிதியாக அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளால் அதிகளவில் பணம் செலவிடப்பட்டது என்று ஆய்வின் மூலம் தெரியவந்தது. அத்துடன் கடந்த நிதியாண்டில் தேசிய கட்சிகளுக்கு நன்கொடை நிதி அதிகரித்ததும் தெரியவந்தது. இந்நிலையில் பங்குச் சந்தையில் முதல் 50 இடங்களிலுள்ள தொழில்நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் 692.8 கோடி ரூபாய் நிதியை அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் இத்தகல் கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக டாடா நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து 395 கோடி ரூபாய் நிதி உதவியை அளித்துள்ளனர். இதற்கு அடுத்த படியாக அனில் அகர்வாலின் வேதானந்தா நிறுவனம் 67 கோடி ரூபாய் நிதியை அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 54.2 கோடி ரூபாய் நிதியை கொடுத்துள்ளது.
மேலும் இந்த ஆய்வில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், அதானியின் அதானி போர்ட்ஸ் நிறுவனமும் கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவி அளிக்கவில்லை என்று தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளன. பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் கம்பெனி சட்டத்தின் பிரிவு 182ன் படி தங்களின் அரசியல் நிதியுதவி குறித்து தெரிவிக்க வேண்டியது அவசியம். கடந்த 2017ஆம் ஆண்டு நிறுவனங்கள் நிதியுதவிக்கான உச்சகட்ட வரம்பு தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.