“பாஜகவை புறக்கணியுங்கள்” உ.பி. கிராமங்களில் வைக்கப்பட்ட பதாகைகளால் பரபரப்பு!

“பாஜகவை புறக்கணியுங்கள்” உ.பி. கிராமங்களில் வைக்கப்பட்ட பதாகைகளால் பரபரப்பு!
“பாஜகவை புறக்கணியுங்கள்” உ.பி. கிராமங்களில் வைக்கப்பட்ட பதாகைகளால் பரபரப்பு!

உத்தரப்பிரதேச கிராமங்களில் பாஜக பிரமுகர்கள் நுழைவதற்கு தடை விதிப்பதாக விவசாய அமைப்பினர் வைத்த பதாகைகளால் பரபரப்பு ஏற்பட்டது. 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் 3 மாதங்களை நெருங்கி விட்டது. போராட்டக்காரர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை. மாறாக விவசாயிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்த மத்திய பாஜக அரசைக் கண்டிக்கும் வகையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி, சம்பால் ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராமப்புறங்களில் பாஜகவை புறக்கணிக்கக் கோரும் பதாகைகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை பாரதிய கிசான் யூனியன் அமைப்பைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கிராமங்களில் ஆங்காங்கே வைத்துள்ளனர். மேலும் சில கிராமங்களில் பாஜக பிரமுகர்கள், நிர்வாகிகள் நுழைவதற்கு தடைவிதித்தும் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.

இந்த பதாகைகளை மாநில போலீசார் அப்புறப்படுத்தி அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது பாரதிய கிசான் யூனியன் உறுப்பினர்கள், ‘விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதை தடுக்க முள்வேலி அமைக்க முடியுமானால், நாங்கள் அடையாள பதாகைகள் வைக்க முடியாதா’ என போலீசாரிடம் கேள்வியெழுப்பினர். மேலும், தங்கள் வீடுகளின் மற்றும் கடைகளின் சுவர்களில் பாஜகவை புறக்கணிக்கக் கோரும் வாசகங்களை வரைவோம் என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   

இதுதொடர்பாக பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் கூறுகையில், ‘’ புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்.  இந்த போராட்டம் விவசாயிகளுடையது மட்டுமல்ல, ஏழைகள், தினக்கூலிகள் உள்ளிட்ட பிற துறையினருக்குமானது. இந்த சட்டங்கள் ஏழைகளை அழித்து விடும். இந்த ஒரு சட்டம் மட்டுமல்ல, இதைப்போல ஏராளமான சட்டங்கள் வரும்’’ என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com