கிடங்குகளில் இருந்து மேலும் ஆயுதங்கள் கொள்ளை; காவல் வீரர் ஒருவர் பலி; மணிப்பூரில் தொடரும் பரபரப்பு

பிஷ்ணுபூரில் இரண்டு ஆயுத கிடங்குகளை வன்முறையாளர்கள் தாக்கி பல்வேறு ஆயுதங்களையும் தோட்டாக்களையும் கொள்ளையடித்துள்ளனர். மேற்கு இம்பாலில் காவல்துறை வீரர் ஒருவர் வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் மணிப்பூரில் மீண்டும் அசாதாரண சூழல் நிலவுகிறது.
manipur
manipurpt web

மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகள் நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பெறும் விவகாரத்திலும் சமீப நாட்களாக சர்ச்சைகள் வெடித்தது. இந்நிலையில், மீண்டும் ஆயுதக்கிடங்கை வன்முறை கும்பல்கள் கொள்ளை அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூர் கலவரம்
மணிப்பூர் கலவரம்file image

மணிப்பூர் மாநிலத்தில் மே 3ம் தேதி குக்கி மற்றும் மெய்தி இனக் குழுவினருக்கிடையே தொடங்கிய இன மோதல் வன்முறை சம்பவங்களாக மாறியது. மோதல் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மணிப்பூரில் மனித உரிமை மீறல்களும் வன்முறை வெறியாட்டங்களும் தினம்தோறும் நிகழ்ந்து வருகின்றன.

பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள நாரன்சீனாவில் அமைந்துள்ள 2வது இந்திய ரிசர்வ் பட்டாலியனின் (IRB) தலைமையகத்தில் நேற்று இரண்டு பாதுகாப்பு நிலைகளை ஆயுதம் ஏந்திய கும்பல் முழுவதும் சூறையாடி, தானியங்கி துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை கொள்ளையடுத்துள்ளது. கெய்ரன்பாபி போலீஸ் அவுட்போஸ்ட் மற்றும் தங்கலவாய் போலீஸ் அவுட்போஸ்ட் ஆகியவற்றில் இருந்த சூறையாடி ஆயுதங்களை கொள்ளையடித்ததுள்ளதாக அதிகார பூர்வ தகவல்கள் கூறுகின்றன.

கும்பல் போலீஸ் ஆயுதக் கிடங்கை உடைத்து, ஏகே 47 துப்பாக்கிகள், வெடி மருந்துகள், பல்வேறு வகையிலான 19,000 க்கும் மேற்பட்ட தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொள்ளையடித்தது. மணிப்பூரில் ஏற்கனவே காவல் நிலையங்களில் இருந்து 4200 க்கும் மேற்பட்ட ஏ கே 47 துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டு அவற்றில் 80 சதவீதத்திற்கும் மேல் பறிமுதல் செய்யப்படாத நிலையில், மேலும் ஆயுத கிடங்கில் இருந்து துப்பாக்கிகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுதக்கிடங்கு
ஆயுதக்கிடங்கு

கங்வாய் பஜாரில் நேற்று மெய்தி இனப்பெண்கள் நடத்திய அமைதி பேரணியை அசாம் ரைபிள் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கிடையே தொடங்கிய மோதல் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசியதில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பெண்கள் அசாம் ரைபிள் மற்றும் RAF ஐ எதிர்கொண்டனர். இந்த சம்பவம் பள்ளத்தாக்கில் உள்ள மெய்தி இன பெண்களுக்கிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வன்முறை இம்பால் நகர் வரை பரவியது. நேற்று மாலை மேற்கு இம்பாலில் இனக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் கிடையே ஏற்பட்ட மோதலில் மணிப்பூர் காவல் வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் கட்டுக்கடங்காத கும்பல் ஒன்றுகூடுதல் போன்ற சம்பவங்களால் கொந்தளிப்பாகவும் பதட்டமாகவும் உள்ளது" என்று காவல்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூரின் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மொத்தம் 129 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக சுமார் 1,047 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலம் முழுவதும் 6 மாவட்டங்களில் துப்பாக்கி சூடு அடிக்கடி நடைபெறுவதாகவும், ஊரடங்கு நேரம் நீடிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதமாக மணிப்பூரில் குக்கி மற்றும் மெய்தி இன குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல் அணைக்க முடியா நெருப்பாக மாறி வருகிறது.

வன்முறைகள் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் கலவரங்களில் ஈடுபடுவர்கள் கொண்டுள்ள ஆயுதங்களின் மூலமும் கணக்கிடப்படுகிறது. வன்முறைகளில் ஈடுபடுவர்களிடம் மேலும் மேலும் ஆயுதங்கள் கிடைக்கும் போது அது மேலும் அதிகமாகுமே தவிர குறையாது. ஏற்கனவே ஆயுதங்கள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளதால் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் அரசு அதிகளவில் பாதுகாப்புகளை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அல்லது ஆயுதங்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com