அதிரடி காட்டும் நிதிஷ் | பீகாரில் பத்திரிகையாளர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.15,000 ஆக உயர்வு!
243 தொகுதிகளை கொண்ட பீகாரில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் நிதிஷ்குமார் தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வருகிறார். இம்மாநில சட்டப்பேரவைக்கு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை பெரிய அளவில் உயர்த்தி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், “ பீகார் பத்திரிகையாளர் கௌரவ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் , தகுதியுள்ள அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் 6,000 ரூபாய்க்கு பதிலாக 15,000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியம் வழங்க சம்பந்தப்பட்ட துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .
கூடுதலாக , பீகார் பத்திரிகையாளர் கௌரவ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் பத்திரிகையாளர் மரணமடைந்தால் அவர் மனைவிக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் 3,000 ரூபாய்க்கு பதிலாக 10,000 ரூபாய் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது .
ஜனநாயகத்தில் பத்திரிகையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் . அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் மற்றும் சமூக வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை பாரபட்சமின்றிச் செய்யவும், ஓய்வு பெற்ற பிறகு கண்ணியத்துடன் வாழவும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, வீட்டு பயன்பாட்டிற்கான முதல் 125 யூனிட் மின்சாரத்திற்கு இனி கட்டணமே வசூலிக்கப்படாது எனவும், இலவச மின்சாரத்தின் நிதி தாக்கத்தைக் குறைக்க, வீட்டின் கூரை மீது பொருத்தப்படும் சூரிய மின் தகடுகள் மற்றும் தொடர்புடைய உபகரணங்களுக்கு, மத்திய அரசு உதவியுடன் 50% மானியம் வழங்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இந்தநிலையில், இந்த அறிவிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.