பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது.
இன்று தொடங்கயுள்ள மழைக்கால கூட்டத்தொடரில் பண மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பி ஓட முயல்பவர்களை தடுப்பதற்கான சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்திருத்தம், உள்ளிட்டவற்றை விவாதத்திற்குக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முத்தலாக் தடுப்புச் சட்டம், நாடாளுமன்றம்-சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு உள்ளிட்ட மசோதாக்கள் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அவையில் சுமூகமாக விவாதம் நடத்தி ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை மேற்கொள்ள ஒத்துழைக்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
அதேவேளையில் பசு பாதுகாவலர்கள் என்கிற பெயரில் நடைபெறும் வன்முறை, குழந்தைக் கடத்தல் வதந்தி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தெலுங்கு தேச கட்சி முயன்று வருகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட திட்டமிட்டுள்ளதால், மழைக்கால கூட்டத்தொடர் அரசுக்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.