"நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும்" - ஓம் பிர்லா !
நாடாளுமன்றத்துக்கான மழைக்காலக் கூட்டத் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. இந்த வைரசால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயமாக கொரோனாவிலிருந்து 19 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுக் குணமாகியுள்ளனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது.
பொதுவாக நாடாளுமன்றத்துக்கான மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூன் மத்தியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்தில் தொடங்கும். இப்போது கொரோனா வைரஸ் பரவல் அச்சமிருப்பதால் திட்டமிட்டபடி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடுமா அல்லது ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பரவல் குறையவில்லை என்பதால் இத்தகைய சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்துள்ள சபாநாயகர் ஓம் பிர்லா "நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும். இப்போதைக்கு ஒத்திவைக்கும் எண்ணமில்லை. இது தொடர்பான முடிவு அப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.