நாட்டில் நான்கில் ஒரு பகுதிக்கு போதிய மழை இல்லை: வானிலை மையம்
தென்மேற்குப் பருவ மழைக்காலம் பாதியை கடந்துவிட்ட நிலையில், நாட்டில் நான்கில் ஒரு பகுதி போதிய மழையைப் பெறவில்லை என்று டெல்லி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை 5 சதவிகிதம் குறைவாகப் பெய்திருப்பதாகவும், சில பகுதிகளில் 26 சதவிகித பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகவும் டெல்லி வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு உத்தரப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் கடற்காற்றின் திசையைப் பொறுத்து கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவ மழையின் தொடர்ச்சியாக சேலம், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.