குழந்தையைத் தூக்கிச் சென்று வீசியெறிந்த குரங்குகள்… உத்தரப்பிரதேசத்தில் தொடரும் அவலம்!

குழந்தையைத் தூக்கிச் சென்று வீசியெறிந்த குரங்குகள்… உத்தரப்பிரதேசத்தில் தொடரும் அவலம்!
குழந்தையைத் தூக்கிச் சென்று வீசியெறிந்த குரங்குகள்… உத்தரப்பிரதேசத்தில் தொடரும் அவலம்!

உத்தரப்பிரதேசத்தில் குரங்குகள் குழந்தைகளைத் தூக்கிச் சென்று வீசியெறிவது தொடர்கதையாகி வருகின்றன. அப்படித் தூக்கி எறியும் குழந்தைகள் உயிருடன் இருப்பதில்லை என்பதுதான் வேதனையான விஷயம்.

கடந்த ஆண்டு (2022) ஜூலை மாதம் 15ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் பரேய்லியில் வசித்து வரும் நிர்தேஷ் உபாத்யயாவின் 4 மாத குழந்தையைத் தூக்கிச் சென்ற குரங்குகள், அதை மாடியிலிருந்து வீசி எறிந்தது. இதில் அந்தக் குழந்தை ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தது. அதேபோல், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி இதே பரேய்லியில் உள்ள பிச்புரி கிராமத்தில் 5 வயது குழந்தையை தூக்கிச் சென்ற குரங்குகள், அக்குழந்தையின் தோல்களைக் கிழித்து வீசி எறிந்தது.

பின்னர் அந்த குழந்தையை குரங்குகளிடமிருந்து காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அதிக ரத்தம் வெளியேறியதில் அந்த குழந்தையும் உயிரிழந்தது. இது தவிர, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான்பூரில் உடைந்திருந்த சுவற்றில் இருந்த செங்கற்களை குரங்குகள் தள்ளியதால் அந்த வீட்டில் இருந்த பெண் மற்றும் அவரது 4 குழந்தைகள் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.

இந்த நிலையில், மீண்டும் உத்தரப்பிரதேசத்தில் குரங்குகள் குழந்தையைத் தூக்கிச் சென்று வீசியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச பண்டா மாவட்டத்தில் உள்ள சபர் கிராமத்தில் விஷ்வேஷ்வர் சர்மா என்பவர் வசித்து வருகிறார். இவரது 2 மாத குழந்தை ஒன்று கடந்த ஜனவரி 3ஆம் தேதி, தொட்டிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியே வந்த குரங்கு கூட்டத்தில் ஒன்று, அந்த வீட்டுக்குள் நுழைந்து குழந்தையை தூக்கி கொண்டு வெளியேறி உள்ளது. குழந்தையை இழுத்துச் சென்றதில் அது வலியில் அழுதுள்ளது. அதன் அழுகை சத்தம் கேட்டதும் விஷ்வேஷ்வர் மற்றும் குடும்பத்தினர் ஓடி வந்துள்ளனர். ஆனால், அதற்குள் குரங்கு மேற்கூரை பகுதிக்குச் சென்று குழந்தையை கீழே வீசி எறிந்துள்ளது. இதில் அந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோது, அந்தக் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுகுறித்து வன துறையினருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த மக்கள் குமுறுகின்றனர். வனத்துறை தரப்பில், “மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் இருந்து குரங்குகளை விரட்டியடிக்க வனத்துறை முயற்சி செய்து வருகிறது. இதற்கு மக்களும் உதவ வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. 

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com