
குரங்குகள் செங்கலால் தாக்கியதில், பூஜைக்கு சுள்ளிப் பொறுக்கச் சென்ற முதியவர் உயிரிழந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் பாஹ்பட் பகுதியில் உள்ளது திக்ரி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் 72 வயது, தரம்பால் சிங். இவர் பூஜை ஒன்றுக்காக, காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்குவதற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றார். அப்போது திடீரென்று மரங்களின் மேல் இருந்து செங்கல்கள் வந்து விழுந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த சிங், இது எப்படி இங்கே வந்தது என்று மேலே பார்த்தார்.
சில குரங்குகள் மொத்தமாக உட்கார்ந்து கொண்டு அவர் மீது செங்கல்களை வீசின. இதில் அவரது தலை, நெஞ்சு உட்பட பல பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இந்த செங்கல்களை அருகில் உள்ள பாழடைந்த பங்களாவில் இருந்து எடுத்து வந்து வீசியுள்ளது.
இதையடுத்து படுகாயமடைந்த அவர், தட்டுத்தடுமாறி வீட்டுக்கு வந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுபற்றி சிங்கின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் விபத்து வழக்காக போலீசார் பதிவு செய்தனர். இதை ஏற்க மறுத்த உறவினர்கள், குரங்குகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வலியுறுத்தி அங்கு பிரச்னையில் ஏற்பட்டது. போலீசார், அப்படியெல்லாம் குரங்குகள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய முடியாது என்று தெரிவித்தனர்.
இந்தப் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும் இதனால் மொத்த கிராமமுமே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் தெரிவித்துள்ளனர்.
குரங்குகள் செங்கலால் எறிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.