மரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ
கர்நாடக மாநிலத்தில் உறவினர் இறந்த துக்கம் தாளாமல் அழுது கொண்டிருந்த பெண் மீது கை வைத்து ஒரு குரங்கு ஆறுதல் கூறும் காட்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் நார்குண்ட் என்ற கிராமத்தில் 80 வயது முதியவர் ஒருவர் நேற்று இறந்து விட்ட நிலையில் அவர் உடலை சுற்றி உறவினர்கள் அமர்ந்து அழுதுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று சற்று நேரம் அமைதியாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது.
பின்னர் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நோக்கி சென்ற குரங்கு, அவர் தோளிலும் பின்னர் தலையிலும் கை வைத்து தேற்றியது. இந்தக் காட்சியைக் கண்டு அங்கிருந்தோர் சோகத்தையும் மறந்து வியப்பில் ஆழ்ந்தனர். இதனை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட அது தற்போது வைரலாகியுள்ளது.
இந்தக் குரங்கு குறித்து பேசிய அக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ''இந்தக் குரங்கு இவ்வாறு செய்வது புதித்தல்ல. இறந்தவர்களின் வீடுகளில் கூட்டமாக மக்கள் அழும் சத்தம் கேட்டாலே அந்தக் குரங்கு வந்து ஆறுதல் சொல்லும். இப்போதெல்லாம் அந்தக் குரங்கு வராமல் இறுதி சடங்குகள் கூட நடப்பதில்லை'' என்று தெரிவித்துள்ளார்.
மனிதருக்கு மனிதர் ஆறுதல் சொல்லக்கூட தயங்கும் இக்காலத்தில் ஐந்தறிவு படைத்த விலங்கு மனிதர்களை தேடி வந்து ஆறுதல் கூறுவது உண்மையிலேயே நெகிழ்ச்சியான ஒன்றுதான் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.