”ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் துணைவேந்தர்கள்; பாக். குறித்து மோகன் பகவத்” - கேராளாவில் புதிய சர்ச்சை
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நேற்று சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. இதில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது, இந்தியா - பாகிஸ்தான் உறவுகள், தேசிய ஒருமைப்பாடு, சமூக நல்லிணக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, பாகிஸ்தானுடன் உரையாடலுக்கான வாயில்கள் திறந்தே இருக்க வேண்டும் எனவும் இந்தியாவின் பாரம்பரியம் எதிரிகளுடன்கூட உரையாடலை தொடர்வதே; நாம் ஹிட்லரைப் போன்றவர்கள் அல்ல எனவும் தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில், மோகன் பகவத்தின் இந்த கருத்துகளுக்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள், "ஒருபுறம் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்து அரசியல் செய்யும் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்., மறுபுறம் பாகிஸ்தானை ஆதரிப்பது போல பேசி இரட்டை நிலைப்பாடு எடுத்துவருகின்றன” என குற்றம்சாட்டி வருகின்றன. அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள், மோகன் பகவத் கூறியது இந்தியாவின் பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையை பிரதிபலிப்பதாகவும், அது பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்து அல்ல என்றும் விளக்கம் அளித்து வருகின்றனர்.
பாகிஸ்தான் தொடர்பாக மோகன் பகவத் தெரிவித்த கருத்துகள் குறித்த விவாதம் இன்னும் ஓயாத நிலையில், அதே நிகழ்ச்சி தொடர்பாக கேரளாவில் மற்றுமொரு அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. அதாவது, ஆர்.எஸ்.எஸ்-ன் கருத்தரங்கில், கேரளப் பல்கலைக்கழகம், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் மற்றும் துஞ்சத் எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்கள் கலந்துகொண்டது பேசுபொருளாகியிருக்கிறது. இதுகுறித்துப் பேசியுள்ள கேரள முதல்வர் வி.டி.சதீசன், கேரள சமூகம் துணைவேந்தர் பதவியை மிகவும் உயர்வாக மதிக்கிறது எனவும் தீவிர வகுப்புவாதக் கருத்துக்களைப் பரப்பிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவரின் நிகழ்ச்சியில் துணைவேந்தர்கள் பங்கேற்றது கண்ணியத்தை குறைக்கிறது எனவும் மூன்று துணைவேந்தர்களும் கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன், துணைவேந்தர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது, உயர்கல்வித் துறையின் மீது ஆர்.எஸ்.எஸ். தனது பிடியை இறுக்கிக்கொள்ள முயற்சிப்பதற்கு இது ஒரு தெளிவான உதாரணம் என விமர்சித்திருக்கிறார். அதேசமயம், பாஜக மற்றும் சங் பரிவாரை எதிர்ப்பதற்கு ஏன் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதை காங்கிரஸ் தலைமையும் மாநில அரசும் விளக்க வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.

