அண்டை வீட்டாரிடம் நிலத்தகராறு.. முகமது ஷமியின் முன்னாள் மனைவி மீது புகார்!
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த முகமது ஷமி, இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவராக உள்ளார். முகம்மது ஷமி அவரது முன்னாள் மனைவி ஹசின் ஜஹானிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார். ஜஹான் மற்றும் அவர்களுடைய மகளின் பராமரிப்புத் தொகையாக மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் வழங்க முகமது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், ஹசின் ஜஹான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள சூரி நகரில் ஹசின் ஜஹானுக்குச் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த இடத்தில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியபோது, ஜஹானுக்கும் அண்டை வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இது, இறுதியில் வன்முறையாக மாறியுள்ளது. இதுதொடர்பாக ஜஹான் அண்டை வீட்டாரைத் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்பேரில், அண்டை வீட்டார் அவர் மீது புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, ஜஹான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.