மோடி- ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தை தேர்வு செய்ததில் சீனா முக்கிய பங்கு
பிரதமர் மோடி- சீன அதிபர் ஸி ஜின்பிங் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை சீன அதிகாரிகள் தேர்வு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஸி ஜின்பிங் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்பு வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டு அரசு இதற்கான ஏற்பாடுகளை செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சந்திப்பிற்காக மாமல்லபுரத்தை சீன அதிகாரிகள்தான் தேர்வு செய்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “சீன அதிபரின் இந்திய பயணம் குறித்து சீனாவில் கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் இந்தியாவிற்கான முன்னாள் சீன தூதரும் தற்போதைய வெளியுறவு இணை அமைச்சருமான லூ சோஹூ (Luo Zhaohui) கலந்து கொண்டுள்ளார். இவர் ஆரோவிலில் தங்கி இருக்கும் சீன அறிஞர் சூ ஃபன்செங் (Xu Fancheng) மாணவர் ஆவார்.
ஆகவே இவருக்கு மாமல்லபுரத்திற்கும் சீனாவிற்கும் இடையேயான வரலாற்று தொடர்பு குறித்து நன்கு அறிந்துள்ளார். எனவே இவர்தான் இந்தச் சந்திப்பிற்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து சீனாவின் இடதேர்வு குறித்து பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரும் மாமல்லபுரத்தில் சந்திப்பு நடப்பதற்கு ஒப்புதல் அளித்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.