"அச்சத்துக்கு நோ சொல்லி, முன்னெச்சரிக்கைக்கு யெஸ் சொல்லுங்கள்" - பிரதமர் மோடி
கொரோனா பரவுவதை தடுக்க மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தும் கொரோனாவிற்கு இந்தியாவில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை முன் எடுத்துள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அச்சத்திற்கு நோ சொல்லி, முன்னெச்சரிக்கைக்கு யெஸ் சொல்லுங்கள் என ட்விட்டர் பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் யாரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு துறைகள் மற்றும் மாநில அரசுகள் சார்பில் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவு, மக்கள் பெரிய அளவில் கூடுவதை தவிர்க்கும்போது கொரோனா பரவுவதை தடுக்கமுடியும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
அதேநேரத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கவில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 4 பேர் குணமடைந்து விட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை என்றார். பொதுமக்கள் ஒன்று கூடுவதையும், தனிநபர்களிடம் இருந்து விலகி இருப்பதையும் கடைபிடித்தாலே போதுமானது என்றும் சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் குறிப்பிட்டார்