"நாட்டின் வரலாற்றில் மைல்கல் தருணம்" : மோடி பெருமிதம்

"நாட்டின் வரலாற்றில் மைல்கல் தருணம்" : மோடி பெருமிதம்

"நாட்டின் வரலாற்றில் மைல்கல் தருணம்" : மோடி பெருமிதம்
Published on

பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டிருப்பது நாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டவிதிகளின் படி, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. எஸ்.சி. பிரிவினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவீதமும், இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 50.5 சதவீத இடங்கள் பொதுப்போட்டிக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் பத்து சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி, ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், 5 ஏக்கருக்கு கீழ் விவசாய நிலம் வைத்திருப்பவர்கள், ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்கு குறைவாக சொந்த வீடு உள்ளவர்கள் மற்றும் நகராட்சிகளில் இருநூறு சதுரஅடிக்கு குறைவான வீட்டுமனை கொண்டவர்கள், பத்து சதவீத இடஒதுக்கீடு பெற தகுதியானவர்களாக வரையறை செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக அரசமைப்புச்சட்டத்தின் 15 மற்றும் 16-வது ஷரத்துகளில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டது. பின்  பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் வகையில் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.இதன் மூலம் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு 59.5 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மீதமுள்ள 40.5 சதவீத இடங்கள் இனி பொதுப்போட்டியாக இருக்கும் நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில் மக்களவையில் மசோதா நிறைவேறிய பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சமுதாயத்தில் அனைத்து தரப்பினருக்கும் நீதி கிடைப்பதற்கு ஒரு சிறந்த நடைமுறை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஏழையும், எந்த சாதி, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழ்வதையும், அனைத்து சந்தர்ப்பங்களையும் பெறுவதையும் உறுதி செய்வதே தங்கள் முயற்சி என பிரதமர் தெரிவித்துள்ளார். 124வது அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது நாட்டின் ஒரு மைல்கல் தருணம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு ஆதரவு அளித்த அனைத்து எம்பிக்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக, பொருளாதார, கல்வியில் உள்ள வேறுபாடுகளை களைந்து அனைத்து மக்களும் சமத்துவம் பெற உதவும் வகையில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டதாக விவாதத்தின்போது நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். பொருளாதார ரீதியில் நலிந்தோருக்கு இடஒதுக்கீடு வழங்கும் இம்மசோதா வரலாற்று சிறப்பு மிக்கது என மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com