மதிப்பெண்களுக்காக படிப்பதை விட்டு திறன் வளர்ப்பதை லட்சியமாக கொள்ளுங்கள்...பிரதமர் மோடி
மதிப்பெண்களுக்காகப் படிப்பதை விட்டு அறிவை வளர்த்துக்கொள்வதற்காக கற்க வேண்டும் என பிரதமர் மோடி மாணவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், மாணவர்களது லட்சியமும் செயல்திறனும் ஒருங்கிணையும் பட்சத்தில் வெற்றி அவர்களைத் தேடி வரும் என்றும் மோடி குறிப்பிட்டார். தேர்வு நேரத்தில் மனதை மகிழ்ச்சியாகவும், உற்சாகமும் வைத்துக்கொள்வது அவசியம் என்றும், அப்போதே சிறப்பான மதிப்பெண்களை பெற இயலும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.
பிறரோடு போட்டி போடுவதைத் தவிர்த்து தங்களை மேம்படுத்திக் கொள்வதில் மாணவர்கள் அக்கறை காட்ட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். மதிப்பெண்களுக்காகப் படிப்பதை விட்டு திறன் வளர்ப்பதை லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்றும் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் பெற்றோர் தங்கள் எதிர்பார்ப்பை குழந்தைகள் மீது திணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக குடியரசு தின விழாவில் பல்துறைகளில் சிறந்து விளங்கியமைக்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்ட மோடி, எல்லையில் பனிப்பொழிவு காரணமாக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டார்.