'காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயக படுகொலை' - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த பிரதமர் மோடி - முழு உரை

'காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயக படுகொலை' - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த பிரதமர் மோடி - முழு உரை
'காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயக படுகொலை' - நாடாளுமன்றத்தில் கொந்தளித்த பிரதமர் மோடி - முழு உரை

“காங்கிரஸ் அரசு மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது கருணாநிதி மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் தலைமையில் செயல்பட்ட தமிழ்நாடு அரசுகளை கலைத்தது” என பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் பேசியுள்ளார். 

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பதிலளித்து மோடி பேசியபோது, ஆரம்பம் முதலே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தொடர் முழக்கங்களை எழுப்பி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஆவேசமாக பேசிய மோடி, “காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டில் கருணாநிதியை அரசை கலைத்த போதிலும், திமுக தற்போது காங்கிரஸூக்கு துணை போகிறது” என குறிப்பிட்டார். அதேபோல “இடதுசாரிகள் மற்றும் சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, தற்போது காங்கிரஸுடன் கைகோர்த்து நிற்கிறார்கள்” என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும் பேசுகையில், “காங்கிரஸ் கட்சி தொடர் ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டது. 90 முறை மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்யும் 356வது சட்டப்பிரிவு, காங். ஆட்சியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 50 மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. திருமதி இந்திரா காந்தி அரை சதம் அடித்தார்” என்றார்.

இதற்கிடையே எதிர்க்கட்சிகள் "அதானி அதானி" என தொடர் முழக்கமிட்ட நிலையில், தான் தன்னந்தனியாக நின்று அத்தனை எதிர்க்கட்சிகளின் தொடர் விமர்சனங்களை எதிர்கொள்வதாக மோடி ஆவேசமாக உரையாற்றினார். உடனே பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் "மோடி மோடி" என பதில் முழக்கமிட்டதால், மாநிலங்களவை பரபரப்பானது. இதனால் மோடி, “முழக்கம் எழுப்பக்கூட எதிர்க்கட்சிகள் தனியாகவே நிற்கும். எனக்கு எதிராக கூட்டணி அமைக்க வேண்டி உள்ளது” என அனல் பறக்க குறிப்பிட்டார். பின், “நீங்கள் எவ்வளவு சேற்றை வாரி வீசினாலும் அதில் தாமரை மலரும்” என நம்பிக்கையுடன் பேசினார்.

தொடர்ந்து "நான் இந்த நாட்டு மக்களுக்காக வாழ்கிறேன். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். ஆகவே உங்கள் அனைவரையும் எதிர்கொள்ளும் வைராக்கியம் எனக்கு இருக்கிறது" என குறிப்பிட்ட மோடி, “இந்த நாட்டுக்காகவே எனது வாழ்க்கை அர்ப்பணம். நான் தன்னந்தனியாக நின்று அனைத்து எதிர்கட்சிகளையும் எதிர்கொள்வதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என உணர்ச்சிகரமாக பேசினார்.

மக்களவையைப் போலவே, பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையிலும் அதானி குழுமம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை. மாறாக தனது அரசின் ஆட்சி காலத்தில் சாமானிய மக்களுக்காக என்னவெல்லாம் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை பட்டியலிட்டு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்படாத சேவைகள் தற்போது அளிக்கப்படுகின்றன என வலியுறுத்தினார். “குடும்ப அரசியல், மக்களுக்கு உதட்டளவில் மட்டுமே சேவை என்கிற மனப்போக்குடன் காங்கிரஸ் அரசுகள் செயல்பட்டன” என மோடி எதிர்கட்சிகளை கடுமையாக சாடினார்.

“இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு பெயரை குடும்ப பெயராக வைக்காமல்,  காந்தி பெயரால் அழைக்கப்படுவது ஏன்?” என ராகுல் காந்தியை குறிப்பிடாமல் மோடி கேள்வி எழுப்பினார். “நேரு பெயரை குடும்பப் பெயராக வைத்துக் கொள்வதால் அவமானம் ஏற்படுமா” என்றும் அவர் அவையில் வினவினார்.

பின்னர் “பழங்குடியினர், பெண்கள், ஏழை மக்கள் போன்ற சமூகத்தில் பல சிக்கல்களை சந்தித்து கொண்டிருக்கும் பலருக்கும் தேவையான தீர்வுகளை எங்கள் அரசு அளித்து கொண்டிருக்கிறது. நிரந்தர தீர்வுகளை அளிக்க நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். மின்சார இணைப்புகள் வழங்கியது, ஜன்தன் வங்கி கணக்குகளை தொடங்கியது, குடிநீர் இணைப்புகள் வழங்கியது, சமையல் எரிவாயு இணைப்புகளை அளித்தது, கழிப்பறைகளை உண்டாக்கி கொடுத்தது, பழங்குடி மக்கள் வளர்ச்சிக்கான நடவடிக்கையை எடுத்தது போன்ற பல்வேறு அம்சங்களில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்றதை விட பல மடங்கு முன்னேற்றம் எங்களுடைய ஆட்சி காலத்தில் நடத்திக் காட்டியுள்ளோம்” என மோடி விளக்கினார்.

“இதற்கு கடினமான உழைப்பு தேவை என எங்களுக்கு தெரியும். எங்களுடைய ஒரே நோக்கமே மக்களின் முன்னேற்றம்தான். இதனால்தான் மக்கள் 'நான் அவர்களுக்காக உழைப்பேன்’ என நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை கடின உழைப்பால் நாங்கள் பெற்றது. மக்களின் இந்த நம்பிக்கை காரணமாக எதிர்க்கட்சிகளின் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை யாரும் ஏற்க மாட்டார்கள்.

எங்கள் ஆட்சியில், ஒரு பெண் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னொரு பெண் நிதி அமைச்சராக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். மட்டுமன்றி எங்கள் ஆட்சியில் மகளிருக்கு சைனிக் பள்ளிகளின் வாயில்கள் திறந்து விடப்பட்டுள்ளன. பெண்கள் பாதுகாப்பு படைகளில் முக்கிய பொறுப்புகளில் ஜொலிக்கிறார்கள்” என்றார்.

பிரதமர் தொடர்ந்து தனது ஆட்சி காலத்தின் சாதனைகளை அடுக்கிய நிலையில், அதானியை பற்றி பேச வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர் முழக்கமிட்டனர். ஆகவே பிரதமர் மோடியின் உரையின் ஆரம்பம் முதல் முடிவு வரை எதிர்க்கட்சிகளின் முழக்கங்கள் தொடர்ந்தன. மாநிலங்களவை தலைவரான குடியரசு துணைத் தலைவர் ஜெகதீஷ், தங்கர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இத்தகைய போக்கு வெட்கப்பட வைப்பதாக வருத்தம் தெரிவித்தார். பலமுறை அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போதும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்காமல் முழக்கமிட்டன.

- கணபதி சுப்ரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com