மீனவர் விவகாரம் குறித்து இலங்கை பிரதமருடன் மோடி பேச்சு.. மனிதாபிமான முறையில் கையாள வலியுறுத்தல்!
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா உடனான சந்திப்பின் போது மீனவர்கள் விவகாரம் குறித்து மோடி பேசியுள்ளார்.
இலங்கையின் 16வது பிரதமராக பதவியேற்றிருக்கும் ஹரிணி அமரசூரிய மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று, டெல்லி வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துப் பேசிய அவர், தான் பயின்ற புதுடெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்குச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
மீனவர் விவகாரம் குறித்து வலியுறுத்தல்..
டெல்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூர்யா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களின் நலன் குறித்து பேசிய பிரதமர் மோடி, மீனவர்கள் விவகாரத்தை இலங்கை அரசு மனிதாபிமான முறையில் கையாள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கல்வி மற்றும் மகளிர் உரிமை மேம்பாடு உள்ளிட்ட இரு நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் தலைவர்கள் ஆலோசித்தனர்.
முன்னதாக கல்லூரியில் உரையாற்றிய போது பேசிய இலங்கை பிரதமர் ஹரிணி, "இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது" என்ற இறையாண்மைக் கொள்கையை இலங்கை தொடர்ந்து கடைப்பிடிக்கும் என்றும், இந்தக் கொள்கை "புனிதமானது" (sacrosanct) என்றும் உறுதியளித்தார்.