மூன்று நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியா திரும்பினார்.
இஸ்ரேல்- இந்தியா இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவானதை அடுத்து பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார். அங்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை, மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. மும்பை, டெல்லி - டெல் அவிவ் இடையே விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் பயணத்தை முடித்துக் கொண்டு ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற மோடி, பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். மாநாடு நிறைவடைந்ததை அடுத்து, நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று காலை டெல்லி வந்தடைந்தார். அங்கு பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

