இந்தியாவின் பெருமை.. உலகின் உயரமான ரயில் பாலம் ‘செனாப்’! - திறந்துவைத்தார் மோடி
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் துவக்கி வைக்க ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில் பாலத்தை ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார். பின்னர் அந்த பாலத்தில் தேசியக்கொடியை அசைத்தபடி நடந்து வந்து தனது மகிழ்ச்சியை பிரதமர் வெளிப்படுத்தினார்.
செனாப் ரயில்வே பாலத்தை திறந்துவைத்த மோடி..
ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கட்டடக்கலையின் அற்புதமான செனாப் ரயில் பாலம், உலகின் மிக உயரமான ரயில்வே எஃகு வளைவுப் பாலமாகும். 1,315 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம், பலத்த காற்றைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1,486 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கட்டப்பட்ட இந்த பாலம், ராம்பன் மாவட்டத்தில் உள்ள சங்கல்தானையும் ரியாசியையும் இணைக்கிறது. ஆற்றுப் படுகையிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செனாப் ரயில் பாலம் பிரான்சில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானது. இதனைத் தொடர்ந்து, Anji பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
Anji பாலம், நாட்டின் முதலாவது கம்பிவழி ரயில் பாலமாகும். இதனைத் தொடர்ந்து வைஷ்ணவ தேவி ஆலயம் அமைந்துள்ள ஜம்மு கட்ராவிலிருந்து ஸ்ரீநகர் வரை இயக்கப்படும் இரண்டு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், இந்தியா ஒருபோதும் பயங்கரவாதத்தின் முன் அடிபணியாது என்றார்.
பாலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். நிகழ்வில் ஜம்மு கஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.