5 மாத குழந்தையின் உயிர்காக்கும் மருந்து... 6 கோடி ரூபாய் இறக்குமதி வரி தள்ளுபடி
அரிதான மரபணு நோயினால் அவதிப்பட்டு வரும் 5 மாத குழந்தையான டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான ஆறு கோடி ரூபாய் இறக்குமதி வரியை தள்ளுபடி செய்துள்ளது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.
மும்பை - அந்தேரி பகுதியில் வசிக்கும் அந்த குழந்தையின் பெற்றோரான பிரியங்கா - மிஹிர் தம்பதியர் கிராவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டி, அந்த நிதியை கொண்டு அமெரிக்காவிலிருந்து 16 கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகளை ஆர்டர் செய்துள்ளனர். அதை இந்தியாவில் இறக்குமதி செய்ய ஜி.எஸ்.டி வரிக்கான தொகையாக 6 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது.
இது தொடர்பாக தங்களது நிலையை பிரதமர் மோடியின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கு மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உதவியுள்ளார். அவரும் தனது பங்கிற்கு மருந்து இறக்குமதி மீதான வரியில் விலக்கு கொடுக்குமாறு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்தி இருந்தார்.
தொடர்ந்து தற்போது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு குழந்தை டீராவின் உயிர்காக்கும் மருந்தின் மீதான ஆறு கோடி ரூபாய் இறக்குமதி வரியை தள்ளுபடி செய்தது. மோடிக்கு நன்றி தெரிவித்து பட்னாவிஸ் கடிதம் எழுதியுள்ளார்.