இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்வதே தனது பயணத்தின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா, போர்ச்சுக்கல், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி செல்கிறார். முதற்கட்டமாக, டெல்லியில் இருந்து போர்ச்சுக்கல் நாட்டிற்கு இன்று புறப்பட்டார். அந்நாட்டு பிரதமருடான சந்திப்பில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. இதைத் தொடர்ந்து அமெரிக்கா செல்லும் மோடி, அந்நாட்டு அதிபர் டிரம்ப்பை சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி அவரைச் சந்திப்பது இதுவே முதல்முறையாகும். எனவே, சர்வதேச அரங்கில் இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபரை தவிர, அந்நாட்டு தொழிலதிபர்கள் மற்றும் நிறுவன அதிபர்களையும் மோடி சந்திக்கிறார்.
இதுபற்றி மோடி கூறும்போது, இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நல்லுறவை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்து செல்வதே தனது பயணத்தின் நோக்கம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகளை பறிமாறிக் கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாகவும் என்று கூறியுள்ளார்.