அமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்

அமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்
அமிர்தசரஸ் ரயில் விபத்து : பிரதமர் மோடி இரங்கல்

பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் விபத்தில் சிக்கி உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசரா விழா கொண்டாட்டத்தின்போது நேரிட்ட ரயில் விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  தசரா கொண்டாட்டத்தின் போது ராவணன் உருவ பொம்மையை வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. உருவபொம்மை எரிக்கப்பட்டப் போது பட்டாசுகள் வெடித்து மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்நிலையில் ரயில் தண்டவாளத்தில் பலர் சிதறி ஓடியதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் நோக்கி சென்ற ரயில் அவர்கள் மீது மோதி நிகழ்ந்த விபத்தில் அப்பகுதியே ரத்தக்களரியாக மாறியது. 

மேலும் விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொண்டாட்டத்தின் போது 700க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கூடியிருந்ததாகவும், பட்டாசு வெடிக்கும் ஒலியில் ரயில் வந்ததை மக்கள் கவனிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. விபத்து குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். 

இந்நிலையில் விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில் “அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. இதயத்தை உருக்குகிறது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

தசரா விழாவில் இந்தச் சோகச்சம்பவம் நடந்துள்ளது பஞ்சாப் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்து கொண்டு இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து  நாளை பஞ்சாப் மாநிலம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறை அளிக்கபட்டு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com