ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குரேஸ் பகுதியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
பிரதமர் மோடி ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் 2014ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு எல்லையில் உள்ள சியாச்சின் மலை உச்சியில் தீபாவளியை கொண்டாடினார். அதே போல் 2015ஆம் ஆண்டு பஞ்சாபில் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் உள்ள ராணுவ வீரர்களுடனும், கடந்த ஆண்டு இமாச்சலப் பிரதேசத்தில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவலர்களுடனும் கொண்டாடினார். இப்படி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கழிந்து வந்த மோடி இந்த முறையும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எந்திப்போரா மாவட்ட எல்லையில் உள்ள குரேஸ் என்ற ஊரில் இருக்கும் படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார்.
பின்பு அவர்களுடன் கலந்து உரையாடிய அவர், தீபாவளி தினந்தன்று சொந்த பந்தங்களை விட்டு நாட்டு மக்களுக்காக உழைக்கும் ராணுவ வீரர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். "நாட்டில் உள்ள 125 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாட வைத்தீர்கள்" என்று அவர்களைப் பாராட்டினார். மொத்த நாடும் உங்கள் தோளுக்கு தோள் கொடுக்கும் என்றும் மோடி ராணுவ வீரர்களிடம் கூறினார். அப்போது அவருடன் ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத்-தும் உடனிருந்தார்.